×

பொங்கல் பண்டிகை உற்சாகத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் கோலாகல கொண்டாட்டம்: படையல் போட்டு மாடுகளை மகிழ்வித்த விவசாயிகள்

 

சென்னை: அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், பயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம்தேதியான நேற்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தங்கள் இல்லங்களை சுத்தப்படுத்தி அழகுபடுத்தி வைத்திருந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அதன்படி, நேற்று பெண்கள் அதிகாலையில் எழுந்து, வாசலில் வண்ண கோலமிட்டு, வீட்டை அலங்கரித்து, வீடுகள் தோறும் தைத்திருநாளை வரவேற்று வருகின்றனர். அத்துடன், புதிய பானையில் புது அரிசியிட்டு, பால் பொங்கி வரும் வேளையில் \\”பொங்கலோ பொங்கல்\\” என்று குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சி பொங்க முழக்கமிட்டனர். பொங்கலை சூரிய பகவானுக்குப் படைத்து, இப்பூமி செழிக்கக் காரணமான இயற்கைக்கும் கதிரவனுக்கும் நன்றி செலுத்தினர்.

தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். பொங்கலை முன்னிட்டு சென்னை, பெங்களூர், கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பேருந்து, ரயில்கள் மூலம் சொந்த ஊர் சென்று குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. பொங்கல் திருநாளை தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி, அனைத்து உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ வேண்டுமென பலரும் மனப்பூர்வமான வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில், பொங்கல் திருவிழாவின் 2-ம்நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதன்படி, விவசாயத்துக்கு உறுதுணைக விவசாயிகளின் குடும்பத்தின் கால்நடைகளுக்கும், உழவுக்கு உதவும் மாடுகளுக்கும், பால் சுரக்கும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதற்காக, முன்னதாகவே, விவசாயிகள் தங்கள் உழவுக் கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டனர். அதற்காக இன்று அதிகாலையிலேயே தங்கள் வீடுகளில் உள்ள பசுக்கள், காளைகளை குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரித்தனர். பின்னர் வீட்டு வாசலில் கரும்பு, பொங்கல் பானைகள், மஞ்சளுடன் பொங்கல் வைத்து சூரிய உதயமாகும் நேரத்தில் படையலிட்டு வழிபாடு செய்தனர். பசுக்களை வணங்கி அவற்றுக்கு பொங்கல் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிறகு சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிடப்பட்டு வழிபாடு நடத்தினர். அதன் பிறகு, வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்பட்டன. பூஜைகள் முடித்த பிறகு, வண்ணம் பூசிய கொம்புகளுக்கு மணியை கட்டிவிட்டு ஊர்வலமாக அதை கொண்டு சென்றனர்.

அதேபோன்று, இன்று காலையிலேயே சிவாலயங்களுக்குச் சென்று நந்தி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. பண மாலை, பூ மாலை, சந்தன மாலை, ஏலக்காய் மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை, பழ மாலை என எல்லா விதமான மாலைகளையும் சூட்டி நந்தியை அலங்கரித்த நிலையில், மக்கள் திரண்டு வந்து தரிசித்தனர். மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு இடங்களில் நடத்துவது வழக்கம். அதன்படி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு போட்டிகள் பல பகுதிகளில் உற்சாக நடத்தப்பட்டு வருகிறது. காளையர்கள், காளைகளுடன் மல்லுகட்டி வருகின்றனர்.

இதைதவிர, ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் இன்று கோலாகலமாக நடத்தப்பட்டன.பொங்கல் தினத்தன்று பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டதைப் போல, இன்றும் பொங்கல் வைத்து கால்நடைகளை வழிபட்டு விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் விழா உற்சாகமாக களைகட்டி காணப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அலை மோதியது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் மக்கள் கண்டு களித்து வருகின்றனர்.

 

Tags : Pongal festival ,Cow Pongal Kolagala ,Tamil Nadu ,Chennai ,Pongal ,Thai ,
× RELATED பாலமேடு ஜல்லிக்கட்டு : 6வது சுற்றின்...