×

வர்த்தக சிலிண்டர் சப்ளையை ஒன்றிய அரசு நிறுத்தியதால் போர் எதிரொலி; சென்னையில் சமையல் எரிவாயு ஆட்டோ காஸ் கடும் தட்டுப்பாடு

 

சென்னை: சர்வதேச அளவில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே மூண்டுள்ள போர் பதற்றத்தின் நேரடி விளைவாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான இந்தச் சூழலைச் சமாளிக்க முடியாமல் ஒன்றிய அரசு திணறி வருவதால், சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளை எந்த நேரத்திலும் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கான விநியோகச் சங்கிலி பெருமளவு முடங்கியுள்ளது. இத்தகைய உலகளாவிய நெருக்கடி ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து, உள்நாட்டில் மாற்று ஏற்பாடுகளைச் செய்வதிலும், போதுமான எரிவாயு இருப்பை உறுதி செய்வதிலும் இந்திய அரசு முற்றிலும் தவறிவிட்டதாகப் பொருளாதார நிபுணர்களும், வணிகர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

‘‘போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், சிறு, குறு வணிகர்களைப் பாதுகாக்க எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் ஒன்றிய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. இதன் விளைவாகவே இன்று நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் நிற்கிறோம்,’’ என உணவக உரிமையாளர்கள் கொந்தளிக்கின்றனர். இதன் நேரடித் தாக்கமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விநியோகம் கடந்த சில நாட்களாகவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வரை ஆங்காங்கே கிடைத்த சிலிண்டர்களை அதிக விலை கொடுத்து வாங்கி எப்படியோ கடைகளை நடத்தி வந்த ஓட்டல் உரிமையாளர்கள், தட்டுப்பாடு தற்போது உச்சத்தை எட்டியுள்ளதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகத்தின் உரிமையாளர் கூறுகையில், ‘வழக்கமாக காலை 5 அல்லது 6 மணிக்கெல்லாம் எங்களுக்கு சிலிண்டர்கள் வந்துவிடும். ஆனால் தற்போதைய தட்டுப்பாட்டால் காலை 8 மணிக்கு மேல் தான் சிலிண்டர் கிடைக்கிறது. சிலிண்டர் விநியோகம் சீராக இல்லாததால், எந்த நேரத்தில் காஸ் தீர்ந்துபோகுமோ என்ற அச்சத்துடனேயே கடையை நடத்த வேண்டியுள்ளது. இதனால், அனைத்து உணவுகளையும் முழுமையாகத் தயாரிக்க முடிவதில்லை.

குறிப்பாக, மதிய நேர முழு சாப்பாடு மற்றும் ஸ்பெஷல் உணவுகள் தயாரிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டோம். குறைந்த அளவிலான சிற்றுண்டி மற்றும் குழம்பு வகைகளை மட்டுமே தயாரித்து வருகிறோம். கையில் இருக்கும் காஸ் இருப்பை வைத்து மட்டுமே இப்போது கடையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். சர்வதேச பிரச்னையைக் காரணம் காட்டி ஒன்றிய அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதால், எங்களைப் போன்ற சாதாரண வியாபாரிகள்தான் நடுத்தெருவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. நாளை சிலிண்டர் வந்தால் தான் கடையைத் திறக்க முடியும், இல்லை என்றால் கடையை மூட வேண்டியது தான்’என விரக்தியுடன் தெரிவித்தார். உணவுகள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது வியாபாரிகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகம் பேர் ஹோட்டல் உணவுகளை அதிகம் நம்பி உள்ளனர். நிலைமையை ஓரளவாவது சமாளிக்க, சில உணவகங்கள் மாற்று ஏற்பாடாக அதிக மின்சாரம் செலவாகும் ‘மின்சார அடுப்புகளை’ பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. பெரிய உணவகங்கள் மட்டுமின்றி, டீக்கடைகளும் இந்த தட்டுப்பாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பல டீக்கடை உரிமையாளர்கள் கள்ளச் சந்தையிலோ அல்லது தனியாரிடமோ அதிக விலை கொடுத்து சிலிண்டர்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சிலிண்டர் ரூ.1500க்கு கிடைத்தது தற்போது ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையாகியுள்ளது. ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு எரிவாயு விநியோகத்தைச் சீராக்காவிட்டால், தயாரிப்புச் செலவு அதிகரித்து, தேநீர், சிற்றுண்டி மற்றும் உணவுகளின் விலையை அதிரடியாக உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்படும் என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். சர்வதேச போர்ச் சூழலைக் காரணம் காட்டி, உள்நாட்டுத் தட்டுப்பாட்டைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒன்றிய அரசின் நிலைப்பாடு தொடர்ந்தால், சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு உணவகங்களும், தேநீர் கடைகளும் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. அதே போல், சென்னையில் ஆட்டோக்களுக்கான எரிவாயுவுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காஸ் கிடைக்காமல் பல கிலோமீட்டர் தூரம் ஆட்டோக்களை ஓட்டுநர்கள் தள்ளிக்கொண்டு செல்லும் அவல நிலை காணப்படுகிறது.

சென்னையில் இயங்கும் லட்சக்கணக்கான ஆட்டோக்கள், டாக்சிகளில் பெருமளவிலானவை எரிவாயுவை நம்பியே இயங்குகின்றன. ஆனால், கடந்த சில நாட்களாகச் சென்னையில் உள்ள பெரும்பாலான ஆட்டோ எல்.பி.ஜி பங்குகளில் ‘நோ ஸ்டாக்’ என்ற பலகைகளே தொங்குகின்றன. எரிவாயு எப்போது வரும் எனத் தெரியாத நிலையிலும், வாழ்வாதாரத்தை ஓட்ட வேண்டிய கட்டாயத்தாலும் ஆட்டோ ஓட்டுநர்களும், எல்.பி.ஜி கார் உரிமையாளர்களும் பங்க் வாசல்களில் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். சில இடங்களில் இரவு பகலாக, விடிய விடிய ஆட்டோக்களிலேயே தூங்கிக் காத்திருக்கும் சோகமும் நடந்து வருகிறது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தும் பலருக்கு எரிவாயு கிடைப்பதில்லை. பங்குகளில் திடீரென காஸ் தீர்ந்துவிடுவதால், இருப்பில் இருந்த கொஞ்சநஞ்ச காஸும் தீர்ந்துபோய் நடுவழியில் ஆட்டோக்கள் நின்றுவிடுகின்றன. வேறு வழியின்றி, சுட்டெரிக்கும் வெயிலிலும், நள்ளிரவிலும் ஆட்டோக்களை கிலோமீட்டர் கணக்கில் வியர்வை சிந்தத் தள்ளிக்கொண்டு செல்லும் பரிதாபக் காட்சிகள் சென்னையின் பல முக்கியச் சாலைகளில் காண முடிகின்றன. ‘‘பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டிய எங்களை, வண்டியைத் தள்ளும் நிலைக்கு ஆளாக்கிவிட்டார்களே” என ஓட்டுநர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தக் கடும் காஸ் தட்டுப்பாட்டால் சென்னையில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. தினக்கூலியை நம்பி வண்டி ஓட்டும் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்கள் இன்று வருமானமின்றித் தவிக்கின்றன. வண்டிக்குக் கட்ட வேண்டிய தவணை, வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்விச் செலவு என அனைத்தையும் எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் அவர்கள் திகைத்து நிற்கின்றனர். மறுபுறம், போதிய ஆட்டோக்கள் இயங்காததால், பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள், மருத்துவமனை செல்வோர் மற்றும் அன்றாடப் பயணிகள் எனப் பொதுமக்களும் உரிய நேரத்திற்குப் பயணம் செய்ய முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வீட்டு சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை. ஆனால் புக்கிங் செய்தால் 21 நாட்களில் சிலிண்டர் கிடைத்து வந்தது. தற்போது அது 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தானியங்கி புக்கிங் செய்ய தனி எண் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தானியங்கி எண் கடந்த 2 நாட்களாக வேலை செய்யவில்லை. எண்ணெய் நிறுவனங்கள் வேண்டும் என்றே எந்த புக்கிங் சேவையை தடை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஏராளமானவர்கள் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது. புக்கிங்கே செய்யாமல் எப்படி வீட்டு சிலிண்டரை பெற முடியும். நேரடியாக ஏஜென்சிக்கு சென்றால் ஸ்டாக் இல்லை என்றும் பதிவு செய்து விட்டோம் 25 நாள் கழித்து வாருங்கள் என்கின்றனர். இதனால் ஏஜென்சி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல இடங்களில் சண்டை நடைபெற்று வருகின்றன.

 

Tags : Union government ,Chennai ,Iran ,Israel ,US ,India ,Chennai… ,
× RELATED அதிகாரிகளாக நீங்கள் நாட்டை கவனிக்க...