- மினி டைடல் பார்க்
- கரூர், நாகை, புதுக்கோட்டை
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- கரூர், நாகை
- புதுக்கோட்டை
- தமிழ்நாடு அரசு
சென்னை: கரூர், நாகை, புதுக்கோட்டையில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். 60,000+ சதுர அடி பரப்பளவில், நான்கு தளங்களுடன் சுமார் 600 பேர் பணிபுரியும் வகையில் இவை ஒவ்வொன்றும் அமைக்கப்பட உள்ளன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூர் மாவட்டம், இனாம் கரூரில் 38.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், புதுக்கோட்டை மாவட்டம், நத்தம்பண்ணை கிராமத்தில் 36.78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் நகரத்தில் 43.78 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மூன்று புதிய டைடல் நியோ பூங்காக்கள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இப்பூங்காக்கள் ஒவ்வொன்றும் சுமார் 600 தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கட்டப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பூங்காக்கள் மற்றும் மினி டைடல் பூங்காக்கள்
2000-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை, தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மாபெரும் வளர்ச்சி பெற வித்திட்டது.
அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் விதமாக மதுரை மாநகரில் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.34 லட்சம் சதுரடி கட்டுமான பரப்பளவுடனும், திருச்சிராப்பள்ளி. பஞ்சப்பூரில் 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவுடனும் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்க முதலமைச்சரால் 18.02.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இவற்றின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 5.57 லட்சம் சதுர அடி கட்டுமான பரப்பளவில், 21 தளங்களுடன் கட்டப்பட்ட பட்டாபிராம் டைடல் பூங்கா முதலமைச்சரால் 22.11.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. ஒசூரில் 100 கோடி ரூபாய் செலவில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இப்பூங்காவின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் ஒவ்வொன்றும் 6000 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இவை மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கவும், புத்தொழில்களை ஆதரிக்கவும். டைடல் நியோ லிமிடெட் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தின் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி கட்டுமான பரப்பளவுடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி விழுப்புரம் மினி டைடல் பூங்கா 17.02.2021 அன்றும், தஞ்சாவூர் மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்கள் 23.09.2024 அன்றும், தூத்துக்குடி மினி டைடல் பூங்கா 29.12.2024 அன்றும், திருப்பூர் மினி டைடல் பூங்கா 11.08.2025 அன்றும், வேலூர் மினி டைடல் பூங்கா 05.11.2025 அன்றும், காரைக்குடி மினி டைடல் பூங்கா 31.01.2026 அன்றும் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 1.08.2025 அன்றும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 5.11.2025 அன்றும் முதல் அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு, அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 25.02.2026 அன்றும், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 26.02.2026 அன்றும் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் திறப்பு
தகவல் தொழிற்நுட்பத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டம், இனாம் கரூரில் 38,50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 61,000 சதுர அடி கொண்டதாகவும், புதுக்கோட்டை மாவட்டம், நத்தம்பண்ணை கிராமத்தில் 36.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 60,100 சதுர அடி கொண்டதாகவும் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம். நாகப்பட்டினம் நகரத்தில் 13.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 61,000 சதுர அடி கொண்டதாகவும், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் மூன்று புதிய மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த மினி டைடல் பூங்காக்களின் மூலம் அந்தந்த மாவட்டங்களில் வசித்துவரும் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன் அப்பகுதிகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவிடும்.
இந்த நிகழ்ச்சியில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தொழில், முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் நியோ மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
