×

வடசென்னையில் பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ரூ.183.77 கோடியில் கட்டிடங்கள் முதல்வர் திறந்து வைத்தார்: புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

 

தண்டையார்பேட்டை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் ரூ.183.77 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்து, 10 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்கள் வழங்கினார். புதிய பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். வடசென்னை வளர்ச்சி திட்டம் சார்பில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன்படி துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை அண்ணா பிள்ளை தெரு, தண்ணீர் தொட்டி தெரு, ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வால்டாக்ஸ் சாலை அண்ணா பிள்ளை தெருவில் ரூ.18.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதல்வர் திருமண மாளிகையை திறந்து வைத்து, 10 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, அண்ணாபிள்ளை தெருவில் ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாநகராட்சி அச்சகத்தை திறந்து வைத்தார். பின்னர், 9.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல்வர் விளையாட்டு திடலை திறந்து வைத்தார். தண்ணீர் தொட்டி தெருவில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரத்தம் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் 133 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்ட 700 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார். இதுபோல் பெருங்களத்தூரில் 4.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பூங்கா, நல்லதண்ணீர் குளம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும் தண்ணீர் தொட்டி தெருவில் 3.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு மையம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 14.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம், வியாசர்பாடி கக்கன்ஜி காலனியில் 10.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம், தண்டையார்பேட்டையில் 16.32 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் ஆகியவை கட்டுவதற்காக அடிக்கல் முதல்வர் நாட்டினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலர் காகர்லா உஷா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் முதன்மை செயலர் பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா மற்றும் திமுகவினர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Chief Minister ,North Chennai ,Metropolitan Development Corporation ,Thandaiyarpet ,M.K. Stalin ,North Chennai… ,
× RELATED கரூர், நாகை, புதுக்கோட்டையில் மினி...