லாகூர்: கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றபோது அங்கிருந்த இஸ்லாமியரை திருமணம் செய்த இந்திய சீக்கிய பெண் கைது செய்யப்பட்டு அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குருநானக் பிறந்த நாள் கொண்டாங்களில் பங்கேற்பதற்காக இந்தியாவின் வாகா எல்லை வழியாக 2000 இந்திய சீக்கியர்கள் பாகிஸ்தான் சென்றனர்.
பின்னர் அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். ஆனால் அதில் சரப்ஜீத் கவுர் என்ற இந்திய சீக்கிய பெண் மட்டும் மாயமானார் நவம்பர் 4ம் தேதி அனைத்து சீக்கியர்களும் வீடு திரும்பிய நிலையில் கவுர் ஷேகுபுரா மாவட்டத்தை சேர்ந்த நசீர் ஹுசைன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பின்னர் இருவரும் லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில் பாரூகாபாத்தில் உள்ள தங்களது வீட்டில் போலீசார் சட்டவிரோதமாக சோதனை நடத்தி தங்களது திருமண பந்தத்தை முறித்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார்.
தம்பதியினரை துன்புறுத்துவதை நிறுத்தும்படி நீதிமன்றம் போலீசாரை அறிவுறுத்தியது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவதற்கு பதிலாக பஞ்சாப் போலீசார் கவுர் மற்றும் நசீரை கைது செய்துள்ளது. கவுர் லாகூரில் உள்ள அரசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார். கவுரை நாடு கடத்த விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
