×

பராசக்தி திரைப்படமும் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமும்

 

மொழியைப் பாதுகாக்க ஒரு மாநிலத்தில் நடைபெற்ற ஒரு போராட்டத்தை ஒடுக்க, தொடர்புள்ள அந்த மாநிலத்தையும் உள்ளடக்கிய ஒரு நாட்டின் ராணுவமே களத்தில் இறங்குமா? இப்படி நடந்த போராட்டத்தில் சொந்த நாட்டு மக்களையே அந்த ராணுவம் சுட்டுக் கொல்லுமா? உலகிலேயே தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக 1965ம் ஆண்டு இபடியொரு சம்பவம் நடந்தது. உலகை உலுக்கிய, இந்தியாவை குலுக்கிய இந்தப் போராட்டம்தான் இந்தித் திணிப்புக்கு எதிரான மூன்றாம் கட்ட போராட்டம். 1959ல் அன்றைய இந்திய பிரதமரான நேரு, சட்ட வரைவை கொண்டு வந்தார். அதில் ஆங்கிலம் தொடரலாம் என்கிற வார்த்தையை, கண்டிப்பாகத் தொடரும் என மாற்றச்சொல்லி பேரறிஞர் அண்ணா வலியுறுத்தினார்.

‘Shall be’ என்கிற வார்த்தையைப் போட்டுவிட்டு ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகத் தொடரலாம் என்கிற இடத்தில், ‘May be’ என அன்றைய இந்திய அரசு பதிவு செய்தது. நேரு ‘தொடரலாம்’ எனச் சொன்னதைத், ‘தொடராமலும் போகலாம்’ என அடுத்து ஒன்றிய அரசின் ஆட்சிக்கு வருகிறவர்கள் பொருள் கொள்வார்கள் என்றார் அண்ணா. ஒன்றிய அரசு இதை செவிமடுக்கவில்லை. விளைவு, அண்ணா எது நடக்கும் என அச்சப்பட்டாரோ அதுவே அரங்கேறியது. நேருவின் மறைவுக்குப் பின் லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமரானதும், ‘15 வருடகாலக் காலக்கெடு முடிந்தது’ எனச் சொல்லி கட்டாய இந்தியை அறிமுகப்படுத்தினார்.

‘1965ம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு நாள் முதல் இந்தி ஆட்சி மொழி’ என்று மத்திய அரசு அறிவித்தது. அதனால் தமிழகத்தில் அதற்கு முதல் நாள், ஜனவரி 25ம் தேதி மாணவர்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘தமிழ் வாழ்க’ என முழக்கமிட்டனர். மெரினா கடற்கரையில் மிகப் பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தினர். நாடு குடியரசாக அறிவிக்கப்பட்ட, 1950, ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம், மத்திய அரசின் ஆட்சி மொழி இந்தி என்றும்; ஆங்கிலம், இணையான மொழியாக 15 ஆண்டுகளுக்கு, 1965 ஜனவரி 25ம் தேதி வரை தொடரும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

1963ம் ஆண்டில் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, வாக்குறுதி ஒன்றை பிரதமர் நேரு அளித்தார். அதாவது இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் தொடரும் என்றார். நேருவின் இந்த வாக்குறுதிதான் லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானதும் மீறப்பட்டது. இதையடுத்து, நேரு அளித்த வாக்குறுதி காக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் பெரும் போராட்டம் தொடங்கியது.

இந்த மூன்றாம் கட்ட இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்கான மையப் புள்ளி 1963 ஏப்ரல் 13 அன்று பதியப்பட்டது. ஆட்சி மொழிகள் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் அன்றைய உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி. இதுதான் எரிமலை புகைய ஆரம்பிக்க காரணமாக இருந்தது.இதை எதிர்த்து முதல் குரல் தமிழ்நாட்டிலிருந்து வந்தது. 1963 நவம்பர் 16 அன்று அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சி மொழிகள் தொடர்பான 17வது பிரிவை எரிக்க முயன்றதாக அண்ணா கைது செய்யப்பட்டார்.

1964 ஜனவரி 25ம் தேதி. இந்தி மட்டும்தான் ஆட்சி மொழியாக தொடரும் என மத்திய அரசு அறிவித்திருந்த நாளுக்கு ஓராண்டுக்கு முன்பு யாருமே எதிர்பார்க்காத அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த திமுக தொண்டர் சின்னசாமி, இந்தி மட்டும் ஆட்சி மொழியாக அரியணையில் அமர்வதைத் தடுத்தாக வேண்டும் என்று திருச்சி ரயில் நிலையம் எதிரே தீக்குளித்து மாண்டார். சின்னசாமியின் உயிர்த் தியாகத்தை நினைவுகூரும் வகையில்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழ்நாடு அரசு கடைபிடிக்கிறது.

சின்னசாமி பற்ற வைத்த நெருப்பு, தமிழக மாணவர்களின் இதயத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. திமுக மட்டுமல்ல, பல்வேறு தமிழ் அமைப்புகளும், இடதுசாரிகளும் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். சின்னசாமியின் முதல் நினைவு நாளன்று, பேரறிஞர் அண்ணாவும் 3000 திமுகவினரும் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தனர்.

ஜனவரி 26ம் தேதி சென்னை மாநகராட்சி ஊழியராக பணியாற்றி வந்த கோடம்பாக்கம் சிவலிங்கம், தீக்குளித்து மாண்டார். மறுநாள், விருகம்பாக்கம் அரங்கநாதன் தீக்குளித்து இறந்தார். அதே நாளில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் முத்து என்பவர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து அய்யாபாளையம் வீரப்பன், சத்தியமங்கல முத்து, கீரணூர் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், சிவகங்கை ராஜேந்திரன், பீளமேடு தண்டபாணி… என பலர் உயிர்த்தியாகம் செய்தனர்.

அப்போது தமிழக காங்கிரஸ் ஆட்சியின் முதல்வராக இருந்த பக்தவச்சலம், போராட்டத்தை ஒடுக்குவதில் கடுமை காட்டினார். போராடியவர்கள் மீது 40 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 5000 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 2000 பேர் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பது பதற வைக்கும் உண்மை. பிப்ரவரி 10 முதல் மார்ச் 2 வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஒரு வாரத்துக்கு அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் புத்திர சிகாமணி தபால் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை துப்பாக்கியால் சுட்டார். நிலைமையை கட்டுப்படுத்த அன்று தமிழ்நாட்டிலிருந்த 33,000 போலீசோடு ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து 5000 ராணுவ வீரர்கள் இறக்கப்பட்டனர்.

வரலாறே எதிர்பார்க்காத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. ராஜாஜி, 1965ல் இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தார். மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படலாம் என தகவல் வந்ததால் அண்ணா, மாணவர் தலைவர்களை அழைத்தார். “நமது எதிர்ப்பை பதிய வைத்துவிட்டோம். போராட்டத்தை கைவிட வேண்டும்” என்றார் அண்ணா. ஆனால், மாணவர் தலைவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

கலவரத்தை அடக்கப் போராடிய மாணவர்கள் மீது பக்தவத்சலத்தின் காங்கிரசு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கிச் சூட்டுக்கு பலர் பலியானார்கள். அதில் முதல் பலி அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் மாணவர் ராஜேந்திரன். மற்றொரு மாணவர் நெடுமாறன் படுகாயமுற்றார். மாணவர்கள் அதிர்ந்தார்கள். போராட்டம் தீவிரமடைந்தது. மாணவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்வதையடுத்து மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமனியம், ஓ.வி.அளகேசன் உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், பிரதமர் லால் பகதூர் சாஸ்த்ரி கேட்டுக் கொண்டதற்கிணங்க, ராஜினாமாவை வாபஸ் பெற்றனர்.

இந்த இடத்தில் 1965, பிப்ரவரி 12 அன்று ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிய சம்பவத்தை நாம் அறிய வேண்டியது அவசியம். தமிழர்களின் மனதில் ‘பொள்ளாச்சி படுகொலை’ என பதிந்துவிட்ட ரத்த சரித்திரம் இது. இந்த அவலம் குறித்து பேராசிரியர் அ.ராமசாமி, தனது மொழிப்போர் குறித்த புத்தகத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ‘தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக்குழு’ அறிவித்தபடி, 1965 பிப்ரவரி 12 அன்று பொள்ளாச்சி நகரில் முழுக்கடையடைப்பு நடைபெற்றது.

காலை 10 மணி அளவில், பாலக்காடு அஞ்சலகம் முன்பு சில மாணவர்கள் கூடி இந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். உயர்நிலைப்பள்ளி மாணவர் ஒருவர் அஞ்சலகத்தின் மேல் ஏறி, அஞ்சலகப் பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அழிக்க முயற்சித்தார்.உடனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காவலர் ஒருவர் திடீரென்று அந்த மாணவரை துப்பாக்கியால் சுட்டார். அந்த இடத்திலேயே அந்த மாணவர் பலியானார். அதிர்ச்சி அடைந்த மக்கள், காவலர்களை நோக்கிச் சரமாரியாகக் கற்களை வீசினர். இதற்கிடையே காவலர்கள் ராணுவ உதவியைக் கேட்டனர். அதன்படி, ஆறு வண்டிகளில் ராணுவத்தினர் பொள்ளாச்சிக்கு வந்து சேர்ந்தனர்.

கூட்டம் கலையும் வரை காத்திராமல் துப்பாக்கிச் சூட்டில் ராணுவத்தினர் இறங்கினர். நான்கே வயதான பெண் குழந்தை குண்டு பாய்ந்து இறந்தது. கூட்டம் சென்றபின், அந்தக் குழந்தையைப் பார்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார். கலைந்தோடியபடியே எதிர்பட்ட அரசு அலுவலகங்களைத் தாக்கி மக்கள் தீ வைத்தனர். பதிலுக்கு ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டனர். மொத்த பொள்ளாச்சியே பற்றி எரிந்தது.

மக்கள் கூட்டத்தை இராணுவம் கலைத்த பின்பு பல இடங்களில் புகைந்து கொண்டிருந்தது. பெரிய கடைத்தெரு உட்பட முக்கியத் தெருக்கள் எல்லாம் கற்களும் உடைந்த கண்ணாடித்துண்டுகளும், எரிந்தும் எரியாமலும் கிடக்கின்ற கட்டைகளாக நிறைந்து ஒரு போர்க்களம் போல் காட்சித் தந்தன. சாலைகளில் போடப்பட்டிருந்த தடைகளை அப்புறப்படுத்த இராணுவத்திற்கு நான்கு மணிநேரத்துக்கும் மேலானது. இராணுவ வீரர்கள் பொள்ளாச்சி முழுவதும் அணிவகுத்து வந்தனர். பொள்ளாச்சியின் நகரமைப்புப் படம் ராணுவத்தின் வசம் சென்றது.

அன்று இரவும் அதைத்தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் இரவில் அறிவிக்கப்படாத ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தது. இரவு வெளியே வந்த இளைஞர்கள் இராணுவத்தால் தாக்கப்பட்டனர். ஏறத்தாழ 12 நாட்கள் பொள்ளாச்சி நகரக் காவல் ராணுவத்தினரிடம் இருந்தது. பொள்ளாச்சியில் பல கட்டங்களில் ராணுவ வீரர்கள் சுட்டதில் எத்தனை பேர் இறந்திருப்பர்? சரியான பதில் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 200 பேர் வரை இறந்திருக்கலாம் என்கின்றனர். ஏனெனில் உண்மையை மறைப்பதற்காக இவை தொடர்பான கோப்புகள் அனைத்தும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுவிட்டன.

தெருவிலே கிடந்த பிணங்களை உறவினர்கள் கூட எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மாறாக பிணங்களை எல்லாம் சேகரித்த இராணுவத்தினர் சிலவற்றைப் பழனி சாலையில் உள்ள சுடுகாட்டில் போட்டுத் தீ வைத்துக்கொளுத்தினர். சுடுகாட்டைச் சுற்றிலும் இராணுவத்தினரும் துப்பாக்கி பிடித்த காவலரும் காவல் காத்தனர். சுதந்திர இந்தியாவில், தன் நாட்டு மக்களுக்கு எதிராகவே அரசு நடத்திய ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ இது மக்கள் பேசத் தொடங்கினார்கள்.

இப்படி எல்லா பக்கங்களில் இருந்தும் அரசுக்கு எதிரான அழுத்தம் வலுவடையவே, தமிழக முதல்வர் பக்தவச்சலம் மாணவர் தலைவர்களை அழைத்துப் பேசினார். ஆங்கிலம் தொடரும் என்ற நேருவின் வாக்குறுதி காப்பாற்றப்படும் என பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கூறியதாக தெரிவித்தார். 1965 ஜனவர் 25 தொடங்கிய போராட்டம் 50 நாட்கள் கடந்து மார்ச் 15ம் தேதி முடிவுக்கு வந்தது. 1968 ஆட்சி மொழிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரும் என மத்திய அரசு மாற்றியது.

அது இப்போது வரை தொடர்கிறது. ஆனால், பிரச்னை முடியவில்லை. 1968ல் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கியது. இந்தி பேசும் மாநில மாணவர்கள் இந்தி, ஆங்கிலத்துடன் இன்னொரு இந்திய மொழியை (preferably தென் மாநில மொழி) படிக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலத்தில் உள்ளூர்மொழியுடன் ஆங்கிலமும் இந்தியும் படிக்க வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டது.

இதை எதிர்த்து, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை கடைபிடிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார் அன்று தமிழக முதல்வராக இருந்த அண்ணா. அதன்படி தமிழ்நாட்டில் தாய்மொழி, ஆங்கிலம் மட்டும் படித்துக் கொண்டிருக்கிறோம். மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பு மொழியாக இந்தி இருப்பதால் என்ன தவறு என கேள்வி எழுந்தபோது அண்ணா சொன்ன பதில் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியது.

‘‘சின்ன நாய், பெரிய நாய் என இரண்டு நாய்கள் இருக்கிறதென்றால், சின்ன நாய் செல்ல சின்னக் கதவும் பெரிய நாய் செல்ல பெரியக் கதவும் தனித்தனியாக எதற்கு? பெரிய கதவு வழியாகவே சின்ன நாய் போக முடியுமே! இங்கே சின்னக் கதவு இந்தி, பெரியக் கதவு ஆங்கிலம். ஆங்கிலத்தை வைத்து இந்தியாவுக்குள்ளும் பேச முடியும், உலகத்தோடும் பேச முடியும். அதனால் நாங்கள் ஆங்கிலத்தை படித்துக் கொள்கிறோம், இந்தி தேவையில்லை…” என்றார் அண்ணா. இதில் கவனிக்க வேண்டியது ஒன்றுதான். இந்தியை யாரும் படிக்கக் கூடாது என்று தமிழக அரசோ தமிழ்நாட்டு மக்களோ தடுக்கவில்லை. விருப்பம் இருப்பவர்கள் படிக்கட்டும் என்ற நிலைப்பாட்டில்தான் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நீடிக்கிறது.

Tags : Tamil Nadu ,
× RELATED பராசக்தி திரைப்படமும் தமிழ்நாட்டில்...