×

கொலையான தந்தையின் கனவை நனவாக்கிய மகள்; எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்து சாதனை

ஹசாரிபாக்: தந்தையை இழந்த வறுமை நிலையிலும் படித்து முன்னேறிய இளம்பெண், தற்போது எல்லை பாதுகாப்பு படையில் இணைந்து சாதனை படைத்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சனா குமாரி. இவரது தந்தை மனோஜ் குமார் குஷ்வாஹா கடந்த 2013ம் ஆண்டு ஓட்டல் அறையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது ரஞ்சனாவுக்கு வெறும் 9 வயது மட்டுமே ஆகியிருந்தது. தந்தையின் திடீர் மறைவால் குடும்பம் வறுமையில் வாடியது.

இருப்பினும் தாயார் அங்கன்வாடி மையத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து, பெரும் போராட்டத்திற்கு இடையே தனது மூன்று மகள்களையும் படிக்க வைத்தார். தந்தையின் இழப்பு தந்த வலியும், தாயின் தியாகமும் ரஞ்சனாவை உறுதியுடன் வளரச் செய்தது. இந்நிலையில் விஷ்ணுகர் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்ற ரஞ்சனா, எஸ்எஸ்சி தேர்வில் வெற்றி பெற்று எல்லை பாதுகாப்பு படைக்குத் தேர்வானார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் ஓராண்டு கடுமையான பயிற்சிக்குப் பிறகு, தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் செக்டாரில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணிக்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் முதல் முறையாக சீருடை அணிந்தபோது எனது தந்தையின் நினைவு வந்தது. அவரது கனவை நிறைவேற்றி உள்ளேன். இந்த சீருடை எனது தாயின் போராட்டம் மற்றும் தியாகத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வறுமையிலும் படித்து எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ள ரஞ்சனாவின் சாதனை பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

Tags : Border Security Force ,Hazaribagh ,Ranjana Kumari ,Jharkhand ,Manoj Kumar Kushwaha ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...