×

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை தீர்க்க மாற்று வழிகளை கையாள்வது அவசியம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி கருத்து

புதுடெல்லி: இந்தியாவில் தேங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான வழக்குகளைத் தீர்க்க மாற்று வழிமுறைகளை கையாள்வது அவசியமாகிறது. தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பு வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கியுள்ளது. இதில் சுமார் 3.9 கோடி குற்றவியல் வழக்குகளும், 1.1 கோடி சிவில் வழக்குகளும் அடங்கும். குறிப்பாக, இந்த ஆண்டு தொடக்க நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 92,000க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பது சாதனையாகக் கருதப்படுகிறது. இவ்வளவு வழக்குகள் தேங்கியிருப்பது நாட்டின் நீதி வழங்கும் கட்டமைப்பில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இந்தச் சூழலில், நேற்று டெல்லியில் நடந்த சட்டச் சீர்திருத்தங்கள் குறித்த மாநாட்டில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி என்.கோதீஸ்வர் சிங் பேசுகையில், ‘இந்தியாவில் தேங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான வழக்குகள் என்பது நாட்டின் ‘சட்ட ஆரோக்கியத்தை’ பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், நிலுவையில் உள்ள லட்சக்கணக்கான வழக்குகள் என்பது சமூகத்தின் நோய்க்குறிகளைப் போன்றது. வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய வேண்டுமானால், வழக்குகளை விரைந்து முடிப்பது மிக முக்கியமானது.

வர்த்தக ரீதியான பிரச்னைகளுக்கு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணும் முறையை இனிமேல் ஒரு மாற்றாக மட்டும் பார்க்காமல், முதன்மையான தீர்வாகக் கருத வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை சட்ட மாணவர்கள் மூல மந்திரமாக கொண்டு செயல்பட வேண்டும். தொழில்நுட்பம் மற்றும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன் ஆக்கபூர்வமான பணிகளுக்கு உதவியாக இருக்க வேண்டுமே தவிர, மனித மூளையின் சிந்தனைக்கு மாற்றாக இருக்கக் கூடாது’ என்று தெரிவித்தார்.

Tags : Supreme Court ,New Delhi ,India ,National Judicial Data Infrastructure ,
× RELATED 37 எம்பி பதவிக்கு போட்டியிட்ட 26 பேர்...