×

ஓகே… ஓகே… தவிர வேற பேச்சே இல்லை: அமித்ஷா குரலுக்கு நடுங்கிய டிடிவி டெல்லியில் சரணடைந்த ரகசியம்: பரபரப்பு தகவல்கள்

திருச்சி: அமித்ஷா குரலுக்கு நடுங்கி டெல்லியில் டிடிவி சரணடைந்த ரகசியம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் தஞ்சாவூரில் ஜன.5ம் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடந்தது. கூட்டத்தில், அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகையில்,‘‘தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. அது என்றைக்கும் தொடர வேண்டும். தமிழகத்தில் சாதி, மதங்களை, கடவுகளின் பெயரை எந்தவொரு அரசியல் இயக்கமும், எந்தவொரு அமைப்பும் பயன்படுத்தி, இங்கே வாழ்கின்றவர்களிடம் எந்தவொரு குழப்பமும் ஏற்படுத்திவிடக்கூடாது. யாரிடமும் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளாமல், அதே நேரத்தில் தமிழகத்தின் நலனுக்காக செயல்படக் கூடிய வகையில் அமமுக உறுதியாக துணை நிற்கும். தேர்தலுக்கு தயாராகுங்கள். கூட்டணி பற்றி எல்லாம் யாரும் எந்த கவலையும் பட வேண்டாம். தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்றெல்லாம் என் கண்களுக்கு தெரியாது,’’ என்றார்.

டிடிவி.தினகரன் பேசுவதற்கு முன்பு, உதவியாளர் ஒருவர் அவசர அவசரமாக ஓடி வந்துள்ளார். தொடர்ந்து, அந்த நபர் டிடிவி.தினகரனிடம் போனில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருப்பதாக தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் பயந்து போன டிடிவி, போனை வாங்கிக்கொண்டு சிறிது தூரம் சென்று பேசினார். ஓ.கே… சார்… ஓ.கே…சார்… என்ற வார்த்தையை மட்டும் தான் டிடிவி சொல்லிக் கொண்டு இருந்தாராம். பின்னர், மேடைக்கு வந்து அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து, மீண்டும் உதவியாளர் ஓடி வந்து, போனை கொடுத்துள்ளதாக தெரிகிறது. போனை பதற்றத்துடன் வாங்கிய டிடிவி, ஓ.கே… சார்… ஓ.கே…சார் என்று மெல்லிய குரலில் பேசினாராம். தொடர்ந்து, மேடைக்கு வந்த டிடிவி, இறுகிய முகத்துடன் காணப்பட்டதாக தெரிகிறது. போனில் பேசுவதற்கு முன்பு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என கூறி வந்த டிடிவி.தினகரன், போனில் பேசிய பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க வேண்டாம் என நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அமமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தஞ்சாவூரில் மீட்டிங் நடக்கும் போது, 2 முறை அவசர அவசரமாக டிடிவி.தினகரன் போன் பேசினார். போனில் பேசிய பிறகு, அவரது நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்தது. குறிப்பாக, அடிக்கடி துரோகி எடப்பாடி பழனிசாமி என சொல்லி வந்த டிடிவி.தினகரன், அதிமுக குறித்து இனி பேச வேண்டாம் என கூறியுள்ளார். ஜன.5ம் தேதி தஞ்சாவூரில் அமமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும் போது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சியில் தான் தங்கியிருந்தார். புதுக்கோட்டை மற்றும் திருச்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமித்ஷா சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழக பாஜவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, டிடிவி.தினகரன் குறித்தும் பாஜ தலைவர் ஒருவர் பேசியுள்ளார். தொடர்ந்து, நீங்கள் பேசினால், கூட்டணிக்கு அவர் வந்து விடுவார் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தமிழக பாஜ நிர்வாகி ஒருவர், தன்னுடைய போனில் இருந்து டிடிவியை தொடர்பு கொண்டார். பின்னர், அமித்ஷா பேசியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன் பாண்டிச்சேரி சென்று, அங்கிருந்து பெங்களூரு சென்றதாக தெரிகிறது. பெங்களூருவில் இருந்து டெல்லி சென்று, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டிடிவி.தினகரன் சந்தித்து பேசியுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், உங்கள் மீதுள்ள வழக்குகளை தூசி தட்ட நேரிடும் என மிரட்டும் தொனியில் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து, நீங்கள் சொல்லுவதை நான் கேட்கிறேன் என டிடிவி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன் அதிமுக-பாஜ கூட்டணியில் அமமுக சேரும்’’ என்றனர்.

Tags : TTV ,Amit Shah ,Delhi ,Trichy ,AMMK ,General Secretary ,Dinakaran ,Thanjavur ,
× RELATED தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம்!