×

தகாத உறவுக்கு எதிர்ப்பு: கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி

திருமலை: கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவனுக்கு அதிகளவு தூக்க மாத்திரை கலந்து கொடுத்தும், கள்ளக்காதலன், ரவுடி கும்பலை வைத்து கழுத்தை நெரித்தும் கொன்று நாடகமாடிய மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சவுமியா (30). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் அலுவல ஊழியராக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சவுமியாவுக்கும், அதே பள்ளியில் பி.டி. மாஸ்டரான திலீப் (28) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோதும் சவுமியா, திலீப்புடன் தொடர்ந்து நீண்ட நேரம் போனில் பேசுவாராம். இதையறிந்த ரமேஷ், சவுமியாவை கண்டித்துள்ளார். இருப்பினும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. இந்நிலையில் ரமேஷ் ரூ.2 கோடிக்கான காப்பீடு செய்திருப்பது சவுமியாவுக்கு தெரிய வந்தது. கள்ளக்காதலுக்கு தொடர்ந்து இடையூறாக இருக்கும் ரமேஷை கொன்றுவிட்டால் ரூ.2 கோடி காப்பீடு பணம் கிடைக்கும்.

இதை வைத்து ஜாலியாக வாழலாம் என திலீப்பிடம் சவுமியா ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட திலீப், ரமேஷை கொல்ல திட்டமிட்டார். இதற்காக தனது தம்பி அபிஷேக்கிடம் கூறியுள்ளார். இவர்களது திட்டத்தின்படி கடந்த 3 மாதங்களுக்கு முன் ரமேஷ் சென்ற பைக் மீது காரை மோதியுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரமேசுக்கு கை எலும்பு முறிந்தது. இந்நிலையில் அபிஷேக் தனது நண்பரான ரவுடி கும்பல் தலைவன் ஜிதேந்திராவை திலீப்பிற்கு அறிமுகப்படுத்தினார். அவரிடம் திலீப்பும், சவுமியாவும் பேசி ரமேசை கொல்ல ரூ.35 ஆயிரம் கொடுத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 19ம்தேதி இரவு ரமேஷூக்கு அதிகளவு தூக்க மாத்திரைகளை சவுமியா தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார். இதனால் அயர்ந்து தூங்கிய ரமேஷை, சவுமியா தனது கள்ளக்காதலன் திலீப், ரவுடி கும்பலை வரவழைத்து கழுத்தை துணியால் சுற்றி மூச்சு திணறடித்து கொலை செய்துள்ளனர்.

மறுநாள் காலையில் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக சவுமியா அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் கூறி கதறி அழுது நாடகமாடினார். மறுநாள் இறுதிச்சடங்கு முடிந்து உடலை அடக்கம் செய்தனர். இதற்கிடையில் வெளிநாட்டில் இருக்கும் ரமேஷின் தம்பி கோதாரி, அண்ணனின் இறுதிசடங்குக்கு வரமுடியாத நிலையில் அவருக்கு செல்போனில் இறப்பு, இறுதிச்சடங்கு போட்டோக்கள் அனுப்பப்பட்டது. இதை பார்த்தபோது ரமேஷின் கழுத்தில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கோதாரி, ரமேஷின் வீடு அருகே வசிக்கும் தனது மனைவிக்கு தெரிவித்து போலீசில் புகார் அளிக்க செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சவுமியாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றதை சவுமியா ஒப்புக்கொண்டார். இதையடுத்து நேற்று தாசில்தார் முன்னிலையில் ரமேஷின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சவுமியா, அவரது கள்ளக்காதலன் திலீப், அபிஷேக் மற்றும் ரவுடி கும்பலான ஜிதேந்தர், ராம் மற்றும் ராகேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Telangana State ,Nizamabad District Borkan Village ,
× RELATED 10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை: வாலிபர் கைது