சிட்னி: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடியது. ஏற்கனவே முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடிய ஆஸி, 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் துவங்கியது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில், ஜோ ரூட்டின் 160 ரன் உதவியுடன் 384 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 163, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 138 ரன் குவிக்க, 567 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 2ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில், கடைசி நாளான நேற்று இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது. 4ம் நாளில் சதம் விளாசியிருந்த ஜேகப் பெத்தேல், நேற்று மேலும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து, 154 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் கடைசி வீரர் ஜோஷ் டங்கும் 6 ரன்னில் வீழ்ந்தார். அதையடுத்து, 160 ரன் இலக்குடன் ஆஸ்திரேலியா 2ம் இன்னிங்சை துவக்கியது. துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 29, ஜேக் வெதரால்ட் 34 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின் வந்த மார்னஸ் லபுஷனே 37 ரன்னில் ரன் அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித் 12, உஸ்மான் கவாஜா 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசியில் 31.2 ஓவரில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக டிராவிஸ் ஹெட், தொடர் நாயகனாக மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டனர்.
