நாகர்கோவில், ஜன. 6: நீதிமன்றங்களில் வழக்கு தொடர்பாக ஆஜராகும் போது ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, அதன் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து குமரி மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் குமரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக உத்தரவு நகல் எரிப்பு போராட்டம், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம், வக்கீல்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை வக்கீல்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும் நீதிமன்ற புறக்கணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் நீதிமன்ற புக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாளை(7ம் தேதி) சென்னையில் உள்ள தலைமை உயர்நீதிமன்றத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளனர். இதற்காக குமரி மாவட்ட வக்கீல்கள் இன்று சென்னைக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
