×

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க அறிமுகம் செய்யப்பட்ட அலைபேசி, வலைதளம் வாயிலாக ஒரே நாளில் 14,318 கோரிக்கைகள், பரிந்துரைகள்: பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க அறிமுகம் செய்யப்பட்ட அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் வழியாக ஒரே நாளில் 14,318 பேர் கோரிக்கைகள், பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பொருட்டு, திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், எம்எல்ஏக்கள் தமிழரசி, டாக்டர் எழிலன், முன்னாள் எம்பி டி.கே.எஸ். இளங்கோவன், அப்துல்லா, கார்த்திகேய சிவசேனாபதி, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜி. சந்தானம், தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம் ஆகிய 12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்தார்.

இக்குழுவினர் பொதுமக்கள்,வணிகர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக சந்தித்து பரிந்துரைகளை பெரும் பொருட்டு தமிழ்நாடு முழுக்க பயணம் செய்ய உள்ளனர். இதன் தொடக்க நிகழ்வாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் (போர்டல்) ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார். இதற்காக 08069446900 என்ற தொலைபேசி எண்ணில் ஆலோசனை தெரிவிக்கலாம்.

மேலும் வாட்ஸ்அப் எண்: 9384001724, மின்னஞ்சல்: dmkmanifesto2026@dmk.in, இணையதளம்: http://www.dmk.in/ta/manifesto2026, சமூக வலைத்தளங்கள்: dmkmanifesto26, செயற்கை நுண்ணறிவுத் தளம்: tnmanifesto.ai என்ற தளங்களின் மூலம் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் திமுகவிற்கு வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. 2026 திமுக தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் அறிமுகம் செய்யப்பட்டதோடு நில்லாமல் மாநிலம் முழுக்கவும் கருத்துகளையும் பரிந்துரைகளையும் வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளில் தொலைபேசி வழியாக 1,188, வாட்ஸ் அப் வழியாக 7,527, மின்னஞ்சல் வழியாக 251, சமூக வலைதளங்களான இணையதளம் வழியாக 2015, கியூ ஆர் ஸ்கேன் வழியாக 692, ஏஐ வலைவாசல் வழியாக 2645 பேர் என மொத்தம் 14,318 கோரிக்கைகளும், பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. திமுகவின் இந்த புதிய முறை பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Chennai ,Dimuka ,Chief Minister of ,Tamil Nadu ,MLA ,K. Stalin ,
× RELATED பாஜ இந்திய வாஷிங் மெஷின்; தவெக நவீன...