சென்னை: 2021 திமுக தேர்தல் அறிக்கையில் 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்குறுதியில் அறிவிக்கப்படாமலேயே பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியும் உள்ளார். இதுகுறித்து, திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: 2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக தனது தேர்தல் அறிக்கையில் 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றன. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது.
மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இது 80 சதவீதம் ஆகும். மீதமுள்ள 101 வாக்குறுதிகளில் 37 வாக்குறுதிகள் ஒன்றிய பாஜ அரசு ஒத்துழைக்காததால் நிலுவையில் உள்ளன. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது போன்ற வாக்குறுதிகள் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு கிடைத்தால் மட்டுமே நிறைவேற்றப்படக் கூடிய வாக்குறுதிகள் ஆகும். 64 திட்டங்கள் தற்போது நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படாத சூழல் உள்ளது. உள்ளூர் போராட்டங்கள்- ஒத்துழைப்பின்மை, தேவைப்படாத சூழல் நிலவுவது போன்ற காரணங்களால் இந்த 64 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்படாமலேயே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு. முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி (கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் நோக்கில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் இல்லம் அருகே கற்பிக்கும் திட்டம்), எண்ணும் எழுத்தும் திட்டம் (எட்டு வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றி படிப்பதும், எழுதுவதும் உறுதி செய்ய உருவாக்கப்பட்ட திட்டம்), புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், நாம் முதல்வன், திறனறித் தேர்வுத் திட்டம் (10ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வு எழுதி வெற்றிபெற்றால் கல்லூரிக் கல்வி வரை மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம்), தோழி விடுதி திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம், தாயுமானவர் திட்டம், அன்புக் கரங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம், கலைஞரின் கனவு இல்லம், மகளிர் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டால் முத்திரை கட்டணத்தில் 1 சதவீதம் சலுகை, மகளிர் பெயரில் மட்டுமே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்கீடு, உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்கள் வாக்குறுதியாக சொல்லப்படாதவை.
தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு அடுத்து அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசுக்கான தேர்தல் அறிக்கையை முனைப்புடன் தயாரித்து வருகிறது திமுக. திராவிட மாடல் 2.0 அரசில் மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும் என்பதால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை, பரிந்துரைகளை வழங்கி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பில் எல்லோரும் பங்கு பெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம். ஸ்டாலின் தொடரட்டும். தமிழ்நாடு வெல்லட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
