- தவெகா
- காமு அரச செயலாளர்
- வீரபாண்டியன்
- மாநில செயலாளர்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- தென்கனிகோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை: ‘தவெக நவீன வாஷிங் மெஷின்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் மூன்று நாட்கள் நடந்தது. இதில் கலந்து கொண்ட அந்த கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், நேற்று அளித்த பேட்டி: வெனிசுலா தாக்கப்பட்டதை கண்டித்து, 6ம் தேதி (நாளை) அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, முதல்வர் அறிவித்துள்ளதையும், பொங்கல் பரிசாக ரூ.3ஆயிரம் அறிவித்துள்ளதையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
திருப்பரங்குன்றத்தில் உருவாக்க நினைத்த அதே பதற்றத்தை சுசீந்திரத்தில் உருவாக்க நினைக்கின்றனர். தமிழ் மண்ணில் பிளவுவாத கருத்துகளுக்கு இடமில்லை. திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
சமீப காலமாக ஒன்றிய அமைச்சர்கள், பா.ஜ., தலைவர்கள், தமிழகம் எங்கும் இல்லாத கடனை பெற்று விட்டதை போலவும், பெரிய அளவில் போதை பழக்கம் புழக்கத்தில் இருப்பது போலவும் கூறி, தவறான பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். அதை வன்மையாக கண்டிக்கிறோம். வட மாநிலங்களில் இருந்து தான் போதை பொருட்கள் வருகிறது. எனவே, தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றிய அரசு தொடர்ந்து பொய் பிம்பங்களை கட்டமைத்து கொண்டிருக்கிறது.
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தரவில்லை. திட்டங்களை கிடப்பில் போடக்கூடாது என்ற காரணத்தினால், தமிழக அரசு கடன் வாங்கி உள்ளது. அந்த கடனை தமிழக அரசு அடைக்கும். அதற்கு ஒன்றிய அரசு தார்மீக ரீதியில் உதவி செய்ய வேண்டும். தமிழக வெற்றிக்கழகம் ஒரு புதிய வாஷிங் மெஷின். நாட்டில் பா.ஜ., நவீன வாஷிங் மெஷின். கொள்ளையடிப்பவர்கள், கலப்படம் செய்பவர்கள், தீமைகள் செய்பவர்கள் பாஜ.,வில் சேர்ந்தால், அடுத்த கணமே தூய்மை அடைந்து விடுவார்கள். எனவே பா.ஜ., இந்திய வாஷிங் மெஷின். தவெக நவீன வாஷிங் மெஷின். இவ்வாறு அவர் கூறினார்.
