பெரம்பூர்: பஸ்சில் செல்போன் திருடி தப்பிக்க முயன்ற தம்பதி உள்பட 4 பேரை பயணிகள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். சென்னை நுங்கம்பாக்கம், கக்கன் காலனியை சேர்ந்தவர் திலகம் (42). புளியந்தோப்பு ஆசிர்வாதபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் நிர்மலா (50). இவர்கள் நேற்றிரவு அண்ணாசாலையில் இருந்து பெரம்பூர் நோக்கி வந்த ‘’தடம் எண் 29 ஏ’’ என்ற பேருந்தில் சென்றனர். ஓட்டேரி மேம்பாலம் அருகே வந்தபோது பேருந்தில் இருந்த 3 பேரின் செல்போன் காணவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து பஸ்சில் தேடியபோது 4 பேர் வேகமாக இறங்க முயன்றனர். இதனால் திலகம் என்பவர் சக பயணிகளின் உதவியுடன் பெண் உட்பட 4 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் 3 செல்போன்கள் இருந்தது.
இதையடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி பெண் உள்பட 4 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் பெரம்பூர் முனியப்பன் நாயக்கன் தெரு பகுதியை சேர்ந்த பழனி (36), அவரது மனைவி ஜமுனா (24), கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த பாலு என்கின்ற சொரி பாலு (39), மதுரவாயல் பகுதியை சேர்ந்த குப்பன் (42) என்பது தெரியவந்தது. இவர்கள் பேருந்தில் இருந்த 3 பேரிடம் செல்போனை திருடி அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்க தயாராக இருந்துள்ளனர் என்பது தெரியவந்தது.
