பண்டா: உத்தர பிரதேசத்தில் திருட்டு வழக்கு கைதியை சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை செய்த காவல் அதிகாரி மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிப்ரஹரி கிராமத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 25 வயது இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கடந்த செப்டம்பர் 1ம் தேதி அந்த இளைஞரை லாக்-அப்பில் வைத்து போலீசார் கடுமையாக தாக்கியதில் அவரது இரண்டு விரல்கள் உடைந்தன. மேலும், ‘குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டால் என்கவுன்டர் செய்து விடுவோம்’ என்று மிரட்டியதோடு, அந்த இளைஞரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து காவலர்கள் மனிதத்தன்மையற்ற முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதித்துறை நடுவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், காப்திஹா கலான் புறக்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிசரண் சிங் மற்றும் ராம்ரூப், பையா, பங்கஜ், ஜுவாலா, வித்யாத்ர், சுனில் ஆகிய 6 தனிநபர்கள் என மொத்தம் 7 பேர் மீது பைலானி காவல் நிலையத்தில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘விசாரணையில் சித்ரவதை தொடர்பான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட காவலர் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.
