×

பள்ளிகளில் மராத்தி மொழி பாடம் கட்டாயம்; இந்தி மொழி திணிப்பை எதிர்ப்போம்: பாஜக முதல்வர் பட்னாவிஸ் அறிவிப்பு

சதாரா: மகாராஷ்டிர பள்ளிகளில் மராத்தி மட்டுமே கட்டாய மொழி என்றும், இந்தி உள்ளிட்ட பிற மொழிகள் மாணவர்கள் மீது திணிக்கப்படாது என்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதலே இந்தி மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கனவே முன்வைக்கப்பட்டது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ள நிலையில், அதனை அனைத்து அரசு அலுவலகங்கள், பெயர்ப்பலகைகள் மற்றும் விளம்பரங்களில் முதன்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மராத்தி மொழியை மக்கள் மொழியாக மாற்றுவதே அரசின் முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சதாராவில் நடைபெற்ற 99வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டில் மகாராஷ்டிர பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘மாநிலத்தில் மராத்தி மொழி மட்டுமே கட்டாய பாடமாகும். மாணவர்கள் விரும்பினால் இந்தி அல்லது வேறு எந்த இந்திய மொழியையும் இரண்டாவது அல்லது மூன்றாவது மொழியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

மூன்றாவது மொழியை எந்த வகுப்பில் இருந்து அறிமுகப்படுத்துவது என்பது குறித்து டாக்டர் நரேந்திர ஜாதவ் தலைமையிலான குழு ஆராய்ந்து வருகிறது. இந்தி உள்ளிட்ட பிற மொழிகளை மாணவர்கள் மீது திணிக்கமாட்டோம். பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகளை வரவேற்கும் நாம், மற்ற இந்திய மொழிகளை எதிர்ப்பது வருத்தத்திற்குரியது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் சம மரியாதை அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

Tags : BJP ,Patnavis ,Satara ,Chief Minister ,Devendra Patnavis ,Maharashtra ,
× RELATED ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம்...