கோவை, ஜன.3: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படவுள்ளது.
கோவை மாவட்டத்தில் 11.50 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளது. இதில் அரிசி ரேஷன்கார்டுகளாக உள்ள 11 லட்சத்து 25 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவு துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பச்சரிசி மற்றும் சர்க்கரை ஆகியவை தயார் நிலையில் உள்ளது. கரும்பு மட்டும் சேலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது.
இதற்காக வேளாண் துறை அதிகாரிகள் சேலம் சென்று விவசாயிகளின் விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் கரும்பு கொள்முதல் செய்யப்படும். கரும்புகள் வரும், 5 மற்றும் 6ம் தேதி லாரிகள் மூலம் கோவை செல்வபுரம் சாலையில் உள்ள கூட்டுறவு அலுவலக வளாகத்திற்கு கொண்டு வரப்படும். பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு ரேஷன்கடைகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் என கூட்டுறவு துறையினர் தெரிவித்தனர்.
