புதுடெல்லி: துபாயில் தலைமறைவாக உள்ள குற்றவாளி தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி ரூ.10 கோடி மதிப்புள்ள நகை,பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளது. டெல்லியில் ஜெம்ஸ் ட்யூன்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் இந்தர்ஜித் சிங் யாதவ். இவர் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல், நிலம் அபகரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக உபி மற்றும் அரியானா போலீசார் ஏராளமான வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இதில் இரண்டு மாநில போலீசார் தேடி வரும் நிலையில் துபாயில் அவர் தலைமறைவாக உள்ளார். இந்தர்ஜித்சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1.22 கோடி பணம், ரூ.8.50 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பண்ணை வீட்டின் உரிமையாளர் சுனில் குப்தா இந்தர்ஜித்சிங்கின் நெருங்கிய கூட்டாளி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
