×

கலிதா ஜியா மறைவுக்கு இரங்கல் வங்கதேச தூதரகத்திற்கு சென்றார் ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு நேரில் சென்றார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், 3 முறை பிரதமராக இருந்தவருமான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் (பிஎன்பி) கலிதா ஜியா உடல் நலக் குறைவால் கடந்த 30ம் தேதி டாக்காவில் காலமானார்.

அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சென்று பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை கலிதா ஜியாவின் மகனும், பிஎன்பி கட்சியின் செயல்தலைவருமான தாரிக் ரஹ்மானிடம் வழங்கினார்.

இந்நிலையில், கலிதா ஜியா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு நேற்று நேரில் சென்றார். அப்புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு சென்றேன். முன்னாள் பிரதமரும், பிஎன்பி தலைவருமான பேகம் கலிதா ஜியாவின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த துக்கத்தைத் தெரிவிக்கும் வகையில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டேன்.

எங்களின் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் வங்கதேச மக்களுடனும் உள்ளன’’ என்றார். இதற்கிடையே, கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதற்காக வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அரசு அதிகாரிகள், தெற்காசிய நாடுகளின் பிரமுகர்கள், பொதுமக்களுக்கு தாரிக் ரஹ்மான் நேற்று நன்றி தெரிவித்தார். இறுதி அஞ்சலியை அமைதியாக நடத்த உதவிய ராணுவம், போலீசார் மற்றும் ஊடகத்துறையினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : Rajnath Singh ,Bangladesh ,Embassy ,Khaleda Zia ,New Delhi ,Defence Minister ,Bangladesh Embassy ,Delhi ,Bangladesh Nationalist Party ,BNP ,
× RELATED டெல்லி தாதா வீட்டில் ரூ.10 கோடி பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி