திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் எம்டிஎம்ஏ, உயர் ரக கலப்பின கஞ்சாவுடன் டாக்டர், மருத்துவ மாணவி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கணியாபுரத்தில் ஒரு வீட்டில் ேபாலீசாா் திடீர் சோதனை நடத்தி அங்கு இருந்த 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிராம் எம்டிஎம்ஏ, 1 கிராம் உயர் ரக கலப்பின கஞ்சா மற்றும் 100 கிராம் சாதாரண கஞ்சா கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரம் கிழக்கே கோட்டையை சேர்ந்த விக்னேஷ் தத்தன் (37), கொட்டாரக்கரையை சேர்ந்த ஹலீனா (27), நெடுமங்காட்டைச் சேர்ந்த முகம்மது அசீம் (29), கொல்லத்தைச் சேர்ந்த அவினாஷ் (29), ஹரீஷ் (29), திருவனந்தபுரம் தொளிக்கோடு பகுதியைச் சேர்ந்த அஜித் (30), பாலோடு பகுதியைச் சேர்ந்த அன்சியா (37) என தெரியவந்தது.
இவர்களில் விக்னேஷ் தத்தன் எம்பிபிஎஸ் டாக்டர் ஆவார். ஹலீனா பல் மருத்துவம் படித்து வருகிறார். அவினாஷ் ஐடி ஊழியர் ஆவார். அசிம், அஜித் அன்சியா ஆகியோர் மீது போதைப்பொருள் கடத்தல் உள்பட ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்கள் 3 பேரும் தான் பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் வாங்கி திருவனந்தபுரம், கொல்லம் உள்பட பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உள்பட பலருக்கு விற்பனை செய்து வந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
