புதுடெல்லி: வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் புகையிலை பொருட்கள் மீது கூடுதல் கலால் வரியும், பான் மசாலா மீது சுகாதார வரியும் அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தீய பழக்கப் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீட்டு வரிக்கு மாற்றாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் பான் மசாலா போன்ற தீய பழக்க பொருட்களின் வரி விகிதம் குறைவதை தடுக்க மத்திய கலால் (திருத்த) மசோதா 2025 மற்றும் பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது சுகாதார வரி விதிக்கும் மசோதா நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த கூடுதல் கலால் வரி வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், ‘சிகரெட்டுகள் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான கூடுதல் கலால் வரி பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையைப் பொறுத்து 1,000 சிகரெட் குச்சிகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரியை அரசாங்கம் விதித்துள்ளது. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கு தற்போது விதிக்கப்படும் 40% ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து இந்த கலால் வரி கூடுதலாக வசூலிக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
இதனால் ஒரு சிகரெட்டின் விலை ரூ.18ல் இருந்து ரூ.72 ஆக அதிகரிக்கும் என பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. 20 எண்ணிக்கைகள் கொண்ட ஒரு சிகரெட் பாக்கெட்டின் விலை ரூ.1400 ஆக அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து ஒன்றிய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதே சமயம் பொருளாதார நிபுணர்கள் இத்தகவலை மறுக்கின்றனர்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வர சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது, உற்பத்தி மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட ஒன்றிய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் அறிமுகப்படுத்தியது. இது வழக்கமான ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல், குறிப்பிட்ட சில பொருட்களுக்கு (புகையிலை, சொகுசு கார்கள் போன்றவை) விதிக்கப்படும் ஒரு கூடுதல் வரி.
இந்த செஸ் மூலம் வசூலிக்கப்படும் நிதி, மாநிலங்களுக்கு இருமாதங்களுக்கு ஒருமுறை இழப்பீடாக வழங்கப்படும். முதலில் 5 ஆண்டுகளுக்கு அதாவது 2022ம் ஆண்டு ஜூன் 30 வரை ஜிஎஸ்டி இழப்பீடு வரி நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டது. பின்னர், இது மேலும் 4 ஆண்டுகளுக்கு, மார்ச் 31, 2026 வரை நீட்டிக்கப்பட்டது.
இதற்கு காரணம், கொரோனா காலத்தில் ஜிஎஸ்டி வருவாய் இழப்பிற்காக மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய அரசு வாங்கிய ரூ. 2.69 லட்சம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்த இந்த இழப்பீடு வரி பயன்படுத்தப்பட்டது. இந்த மொத்த கடன்களும் திருப்பி செலுத்தி முடிக்கப்படுவதால், இழப்பீட்டு வரி முடிவுக்கு கொண்டு வர கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது. ரூ.2.69 லட்சம் கோடி கடன் ஜனவரி 31, 2026-க்குள் திருப்பிச் செலுத்தப்படும்.
எனவே, ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் நீக்கப்படுவதைத் தொடர்ந்து, புகையிலை, பான்மசாலா பொருட்கள் விலை குறைவதை தடுப்பதற்காக மட்டுமே தற்போது கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, தற்போது ஜிஎஸ்டி வரி விகிதத்தில் பான் மசாலா, சிகரெட், மெல்லும் புகையிலை, சுருட்டுகள், ஹுக்கா, ஜர்தா மற்றும் வாசனை புகையிலை உள்ளிட்ட அனைத்து புகையிலைப் பொருட்களும் 28 சதவீத வரி வரம்புக்குள் உள்ளன.
அதன் மீது செஸ் உள்ளிட்ட வரிகள் சேர்த்து மொத்தம் 53 சதவீத வரி விதிக்கப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி 2.0வில், இவை அதிகபட்சமான 40 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படும். ஆனாலும் ஜிஎஸ்டி செஸ் நீக்கப்படுவதால், புகையிலை பொருட்களுக்கு முந்தைய 53% வரி 40% ஆக குறையும். இதை தவிர்க்கவே கலால் வரியை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது.
குட்கா மீது 91 சதவீதம், மெல்லும் புகையிலை மீது 82 சதவீதம் மற்றும் ஜர்தா வாசனைப் புகையிலை மீது 82 சதவீதம் கூடுதல் கலால் வரி விதிக்கப்படும் என கூறி உள்ளது. எனவே, பிப்ரவரி 1ம் தேதிக்கு பிறகு கலால் வரி கூடுவதால் சிகரெட்களின் விலை ஓரளவுக்கு அதிகரிக்குமே தவிர ஒரேடியாக விலை உச்சத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு என நிபுணர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
* பீடிக்கு விலக்கு
பீடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு பீடி பொருட்கள் மட்டும் 18 சதவீத ஜிஎஸ்டி விகிதத்தில் இருக்கும் என ஒன்றிய அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
* கூடுதல் கலால் வரி எவ்வளவு?
புதிய வரி அமைப்பின் கீழ், உயரம் குறைந்த பில்டர் இல்லாத சிகரெட்டுகளுக்கு (65 மி.மீ வரை) 40 சதவீத ஜிஎஸ்டியுடன் ரூ.2.05 கூடுதல் கலால் வரி விதிக்கப்படும். அதுவே, உயரம் குறைந்த பில்டர் சிகரெட்களுக்கு கூடுதல் கலால் வரி ரூ.2.10 விதிக்கப்படும்.
* நடுத்தர நீளமுள்ள சிகரெட்டுகளுக்கு (65-70 மி.மீ) தோராயமாக ரூ.3.6 முதல் ரூ.4 வரை கூடுதல் வரியும், நீளமான, உயர்தர சிகரெட்டுகளுக்கு (70-75 மி.மீ) ஒரு சிகரெட்டுக்கு சுமார் ரூ.5.4 வரியும் விதிக்கப்படும்.
* மற்றவை என்ற பிரிவில் 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.8,500 என்று கணிசமாக அதிக வரி விதிக்கப்படுகிறது, ஆனால் இது அசாதாரண அல்லது தரமற்ற வடிவமைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். மிகவும் பிரபலமான சிகரெட் பிராண்டுகள் இந்த வரி வரம்பின் கீழ் வரவில்லை.
* மாநிலங்களுக்கு 41% வரி பகிர்வு
கலால் வரியிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்படும். இதே போல, பான் மசாலா உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தித் திறனின் அடிப்படையில் சுகாதார வரி விதிக்கப்படும். இந்த வரியிலிருந்து கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி, சுகாதார விழிப்புணர்வு அல்லது பிற சுகாதாரம் தொடர்பான திட்டங்கள் மூலம் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
