×

கொல்கத்தா-கவுகாத்தி இடையே வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் விரைவில் அறிமுகம்: கட்டணங்கள் அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் கொல்கத்தா-கவுகாத்தி இடையே விரைவில் அறிமுகப்படுத்தப்படுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில்களைத் தொடர்ந்து படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு அதன் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாமின் கவுகாத்தி இடையே முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் இயக்கப்படும். இதனை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார்.

இந்த ரயில் சேவை அடுத்த 15-20 நாட்களில் அதாவது ஜனவரி 18 அல்லது 19ம் தேதி செயல்பாட்டிற்கு வரும். அனைத்தும் உறுதியாகி விட்டது. அடுத்த ஓரிரு நாளில் அறிமுக விழா தேதி அறிவிக்கப்படும். வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் கட்டணங்கள் விமான டிக்கெட்டை விட குறைவாக இருக்கும். தற்போது கவுகாத்தியிலிருந்து ஹவுராவுக்கு விமானத்தில் செல்ல ரூ.6 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை செலவாகும்.

இதுவே வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலில் உணவு உட்பட 3ம் வகுப்பு ஏசி கட்டணம் சுமார் ரூ.2,300 ஆகவும் 2ம் வகுப்பு ஏசி கட்டணம் சுமார் ரூ.3,000 ஆகவும், முதல் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.3,600 ஆகவும் இருக்கும். நடுத்தர வர்க்கத்தினரை கருத்தில் கொண்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் மொத்தம் 823 பயணிகள் பயணிக்கும் வகையில் 16 பெட்டிகள் கொண்டதாக இருக்கும்.

11 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மற்றும் ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி இருக்கும். 823 படுக்கை வசதிகளில், 611 மூன்றாம் வகுப்பு ஏசியிலும், 188 இரண்டாம் வகுப்பு ஏசியிலும், 24 முதல் வகுப்பு ஏசியிலும் இருக்கும். வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை ஆனாலும், அசாம் மற்றும் மேற்கு வங்கம் இடையே இயக்கப்படும் ரயில் மணிக்கு 120-130 கிமீ வேகத்தில் இயக்கப்படும்.

வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் பெட்டிகளின் உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் மேலும் எட்டு ரயில்கள் தயாராகிவிடும். இந்த ஆண்டுக்குள் 12 ரயில்கள் தயாராகிவிடும். கவுகாத்தியில் இருந்து புறப்படும் ரயில்களில் அசாமி உணவு வகைகளும், கொல்கத்தாவில் இருந்து புறப்படும் ரயில்களில் பெங்காலி உணவு வகைகளும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

* 2027 ஆகஸ்ட் 15ல் புல்லட் ரயில் ஓடும்
புல்லட் ரயில் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘நாட்டின் முதல் புல்லட் ரயிலுக்கான டிக்கெட் விற்பனை 2027 ஆகஸ்ட் 15ம் தேதி வாங்கலாம். மும்பை-அகமதாபாத் இடையே 508 கிமீ தொலைவுக்கு உலகத் தரம் வாய்ந்த நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடக்கிறது. சூரத் முதல் பில்மோரா வரையிலான 47 கிமீ தூரத்திற்கு பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன’’ என்றார்.

Tags : Kolkata ,Guwahati ,New Delhi ,Kolkata-Guwahati ,Railway Minister ,Ashwini Vaishnav ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...