தேன்கனிக்கோட்டை, ஜன.1: தேன்கனிக்கோட்டை பாண்டுரங்கன் கோயில் பகுதியில், கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என, பிரகாஷ் எம்எல்ஏவிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தேன்கனிக்கோட்டை 11வது வார்டுக்கு உட்பட்ட பாண்டுரங்கன் கோயில் பகுதியில், கடந்த 25 வருடங்களாக 50க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் இல்லாததால், குடியிருப்பு பகுதியிலேயே தேங்கி விடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மழை காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே, அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி செய்துதரக்கோரி, அப்பகுதியை சேர்ந்த வார்டு கவுன்சிலர் பிரேமா சேகர் தலைமையில் 70 பேர், நேற்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ.,விடம் மனு அளித்தனர். அவர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை கடிதம் வழங்கினார். இதையடுத்து அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
