×

எஸ்ஐஆர் பணிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கிருஷ்ணகிரி, டிச.31: கிருஷ்ணகிரியில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து, சிறப்பு தேர்தல் பார்வையாளர், நேரடி ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணகிரி நகராட்சி பாகம் எண் 165க்கு உட்பட்ட வடக்கு மாடவீதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து, சிறப்பு தேர்தல் பார்வையாளர் குல்தீப் நாராயண், கலெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் நேற்று வாக்காளர்களிடம் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, சிறப்பு தேர்தல் பார்வையாளர் குல்தீப் நாராயண் கூறியதாவது: கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணகிரி நகர் பாகம் எண் 165ல், வடக்கு மாட வீதியில் வாக்காளர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று, சிறப்பு தீவிர திருத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது. 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன், தற்போதைய வாக்காளர் பட்டியல் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இளம் வாக்காளர்களின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவரும் தங்களது பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி வாக்காளர் பதிவு அலுவலர் ஷாஜகான், நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Krishnagiri ,SIR ,Northern Matawada ,Kuldeep ,
× RELATED ஓட்டல் தொழிலாளி உள்பட 2 பேர் மாயம்