×

தொடர் விடுமுறையையொட்டி ஆழியார் அணை, கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் வருகை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் மற்றும் கவியருவியில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வால்பாறை, ஆழியார், கவியருவி, டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமின்றி பிற நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இயற்கை அழகை பார்த்து ரசிப்பதற்கும், பொழுதை கழிப்பதற்கும் ஏற்ற இடமாக சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவதை ஆர்வம் கொள்கின்றனர். இதில் ஆழியார் அணைக்கு கோவை மாவட்ட பகுதி மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர் மற்றும் பல்வேறு வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரசு விடுமுறை மற்றும் முக்கிய விஷேச நாட்களின்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

இதில், கடந்த மாதம் 24ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக ஆழியாருக்கு வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது.இதில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மற்றும் நேற்று ஆழியார் அணைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ் ஆகிய வாகனங்களில் அதிகளவில் வந்திருந்தனர்.

அங்கு வந்தவர்கள் அணையை தொட்டுள்ள பூங்காவை கண்டு ரசித்தனர். மழையின்றி வெயிலின் தாக்கம் இருந்தாலும் வெகு நேரம் நின்று அணையில் ரம்மியமாக உள்ள தண்ணீரின் அழகை கண்டு ரசித்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் ஆழியார் அணைக்கு சுமார் 3500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஆழியார் அணை மற்றும் பூங்காவின் அழகை ரசித்த சுற்றுலா பயணிகளில் பலர் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவிக்கும் ஆர்வமுடன் சென்றனர். இதில் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்துள்ளது.

கவியருவியில் ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் பயணிகள் வெகுநேரம் நின்று குளித்து மகிழ்ந்தனர். பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால், காலையிலிருந்து நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வெகுநேரம் காத்திருந்தனர்.

இருப்பினும் சில சுற்றுலா பயணிகள் குளிக்காமல் திரும்பி சென்ற நிலை ஏற்பட்டது. கவியருவியில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால், அங்கு வந்த சுற்றுலா பயணிகளில் பலரும் அருவியருகே குளம்போல் தேங்கிய தண்ணீரில் குளித்து சென்றனர்.

கூட்டம் அதிகரிப்பால் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் ஏற்படுத்திய வாகன நிறுத்தும் இடம் முழுவதும் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்பட்ட்டிருந்தன.

அடுத்தடுத்து வந்த வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால் அங்கு வந்த சுற்றுலா வாகனங்கள், வால்பாறை மலைப்பாதை மெயின் ரோட்டோரம் நிறுத்தப்பட்ட நிலை ஏற்பட்டது. இதில் நவமலை பகுதிக்கு யாரேனும் தடையை மீறி செல்கின்றார்களா என வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வெகு நாட்களுக்கு பிறகு நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வந்திருந்தனர் எனவும், அடுத்து புத்தாண்டு விடுமுறை மற்றும் 4ம் தேதி வரை பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால், வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Aaliyar Dam ,Kavieruvi ,Pollachi ,Aaliar ,
× RELATED தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50...