×

இலங்கை கடற்படையைக் கண்டித்து மண்டபம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்

மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து 335 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லைப் பகுதியில் நேற்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறிய கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், மண்டபம் மீனவர்களை எச்சரித்து, இங்கு மீன்பிடிக்க கூடாது என விரட்டியடித்தனர். இதனால், மீனவர்கள் அப்பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு படகுகளை கொண்டுசெல்லத் தொடங்கினர்.

அப்போது இலங்கை கடற்படையினர் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் படகை மட்டும் சுற்றிவளைத்தனர். படகில் ஏறி சோதனையிட்டு ஜான்தாஸ், அமோஸ்டின், பரலோக ஜெபஸ்டின் ஆன்ட்ரோஸ் ஆகிய மூன்று மீனவர்களை கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையினரை கண்டித்தும் மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் மண்டபம் கோவில்வாடி கடலோரப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

Tags : Mandapam ,Sri Lankan Navy ,Mandapam, Ramanathapuram district ,Indian ,
× RELATED ராமதாஸ் இல்லாத பிணமாகி போன பாமகவை...