×

லாரி மீது பைக் உரசி விபத்து மாணவன் உள்பட இருவர் பலி

பூந்தமல்லி: லாரி மீது பைக் உரசிய விபத்தில் கல்லூரி மாணவன் உள்பட இருவர் பரிதாபமாக பலியாகினர்.  பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் குமரன் நகரை சேர்ந்த பழனி என்பவரது மகன் நிர்மல் (19). திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். சென்னீர்குப்பம் அங்காள பரமேஸ்வரி நகரை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சந்தோஷ் குமார் (18). நண்பர்களான இருவரும் சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் குடோனில் பகுதி நேரமாக இரவு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை வேலை முடிந்து இருவரும் பைக்கில் வீட்டிற்கு வந்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை பாரிவாக்கம் சிக்னல் அருகே சென்ற போது கோழிகளை ஏற்றிக்கொண்டு முன்னால் சென்ற லாரி மீது பைக் உரசியதில் இருவரும் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். இதில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் லாரி டிரைவரான ராணிப்பேட்டையை சேர்ந்த நசீர் (39) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Poontamally ,Nirmal ,Palani ,Kumaran Nagar ,Chennirkuppam ,Thiruverkaud ,
× RELATED பள்ளி விடுமுறையால் படையெடுப்பு...