கொடைக்கானல்: பள்ளி தேர்வு விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நகரில் நேற்று முன்தினம் இரவு வரை போக்குவரத்து நெரிசல் நீடித்ததால் சுற்றுலாப்பயணிகள் அவதியடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை முடிந்த நிலையில், பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையை கொண்டாடுவதற்காக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் முழுமையாக புக் ஆகியுள்ளன. விடுதிகள் கட்டணமும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் காலை முதல் சுற்றுலா பயணிகளின் வாகன போக்குவரத்து அதிகரித்து நகர் பகுதியிலும், முக்கிய சுற்றுலா இடங்களிலும் கடும் நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசை கட்டி நின்றன. காலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு வரை நீடித்தது.
இதனால் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் மலைச்சாலையில் நீண்ட நேரம் காத்திருந்து எறும்பு போல ஊர்ந்து சென்றன. தொடர்ந்து நேற்று காலையிலும் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச்சாலை சீனிவாசபுரம் பகுதியில் சுமார் 5 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் உள்ளூர் மக்களும் அவதிக்குள்ளாயினர்.
* உறைபனி டூ நீர்பனி
* கொடைக்கானலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக உறைபனி சீசன் நீடித்து வந்தது. நேற்று காலை கொடைக்கானலில் காலநிலை மாறி நீர் பனி அதிகளவில் காணப்பட்டது. குறிப்பாக இந்த நீர் பனி துளிகள் முத்து போல் புற்கள், செடிகளில் கோர்த்து நின்றது.
மேலும் நட்சத்திர ஏரியில் படர்ந்திருந்த உறைபனி சூரிய ஒளி பட்டதும் ஆவியாக சென்ற காட்சி சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் கோக்கர்ஸ் வாக் பகுதியில் வெண்பஞ்சு மேகக்கூட்டங்கள் இடையே மெல்ல, மெல்ல உதயமான சூரிய உதயத்தையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
* தொட்டபெட்டாவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொட்டபெட்டா சென்று அங்குள்ள தொலை நோக்கி கருவி மூலம் இயற்கை அழகை காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, டிக்கெட் வாங்கி கொண்டு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால், தற்போது தொட்டபெட்டா மலை சிகரத்தில் உள்ள நடைபாதை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
