தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பாரிமுனை குறளகம் அருகே தூய்மை பணியாளர்கள் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, குறளகம் சந்திப்பு, என்எஸ்சி போஸ் சாலை, உயர் நீதிமன்ற ஆவின் கேட், ராஜாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தூய்மை பணியாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அவர்களை கைது செய்ய கொண்டு வந்த வாகனத்திற்கு அடியில் படுத்துக்கொண்டு போராட்டத்தை தொடர்ந் தனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குறளகம், என்எஸ்சி போஸ் சாலை, ஆவின் கேட், ராஜாஜி சாலை ஆகிய பகுதிகளில் சாலை மறியல் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்து, மாநகர பேருந்து மற்றும் காவல் வாகனங்களில் அவர்களை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால், பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
