- காஞ்சிபுரம்
- பொங்கல்
- அமைச்சர்
- ஆர் காந்தி
- காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு
- மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு
- ஸ்ரீபெரும்புதூர்
- டி. ஆர் பாலு
- மாவட்டம்…
காஞ்சிபுரம், டிச. 24: காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மக்கள் நல்வாழ்வு துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் துறை, கல்வித் துறை, நெடுஞ்சாலை துறை, மின்சாரத் துறை, மீன்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒன்றிய அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்தும், ஆலோசனைகளை வழங்கியும், பணிகளை உரிய காலத்தில் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் டிஆர்.பாலு எம்பி, நிருபர்களிடம் பேசுகையில், திமுகவை தீய சக்தி என்று சொன்னவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று பாருங்கள், தீய சக்தி என்று சொன்னவர்கள் 3, 4 பேர் கடைசியில் இருக்கின்ற இடமே தெரியவில்லை என தெரிவித்தார்.
அமைச்சர் ஆர்.காந்தி, நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆட்சி காலத்தில் செப்டம்பர் மாதம் வரை இலவச வேட்டி, சேலைகள் கொடுத்திருக்கிறார்கள். தற்போது, அது மாதிரி இல்லாமல் அனைத்தும் தயாராக உள்ளது. முதல்வர் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளில், இலவச வேட்டி, சேலையை அதற்கு முன்பு உபயோகப்படுத்த மாட்டார்கள். ஆனால் தற்போது இலவச வேட்டி, சேலைகள் தரமானதாக தயாரிக்கப்பட்டுள்ளதால், அதனை அனைவரும் விரும்புகின்றனர். வேட்டி சேலை திட்டம் தொடங்கிய 20 ஆண்டுகளில் டிசம்பர் 15ம் தேதியே வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது இதுதான் முதல் முறை. ஜனவரி 5,6ம் தேதிக்குள் அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டுவிடும். பட்டு சேலைகளில் நிறைய டிசைன்கள் கொடுத்துள்ளோம், அதனால் தற்போது நிறைய விற்பனையாகிறது. இவ்வாறு கூறினார். இக்கூட்டத்தில் க.செல்வம் எம்பி, கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, சப் கலெக்டர் ஆஷிக் அலி, ஒன்றிய குழு தலைவர்கள் மலர்க்கொடி குமார், தேவேந்திரன், ஹேமலதா ஞானசேகர், சரஸ்வதி மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
