சென்னை: சென்னை பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டணியை விரிவுபடுத்த முடியாமல் அதிமுக திணறும் நிலையில் பியூஷ் கோயல் தமிழ்நாடு வருகை தந்துள்ளார். ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என பழனிசாமி அழைப்பு விடுத்த நிலையில் எந்த கட்சியும் வரவில்லை. மெகா கூட்டணி அமையும் என்று திரும்ப, திரும்ப பழனிசாமி கூறி வந்தாலும் அதிமுக,பாஜக கூட்டணிக்கு எந்த கட்சியும் வரவில்லை. தேமுதிக, பாமக உள்பட எந்த கட்சியும் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை.
அதிமுக-பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டு 9 மாதங்களாகியும் வேறு எந்த கட்சியும் அதில் இணையவில்லை. இரு கட்சிகளும் இணைந்து எந்த நிகழ்வுகளையும் நடத்தவில்லை. பாமகவை கூட்டணியில் சேர்க்க பாஜக திட்டமிட்ட நிலையில் தந்தை, மகன் மோதல் முற்றியுள்ளது. பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் முற்றியுள்ளதால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பாமகவில் நாளுக்கு நாள் குழப்பம் அதிகரிப்பதால் என்ன செய்வது என தெரியாமல் அதிமுக, பாஜக தவித்து வருகிறது.
அதிமுகவிடம் 50க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 54 தொகுதிகளை அக்கட்சி ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது. தங்களுடன் வரும் சிறு கட்சிகளுக்கும் சேர்த்து பாஜக சுமார் 70 தொகுதிகள் வரை கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். பியூஷ் கோயலை சற்றுநேரத்தில் சந்திக்க உள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
