×

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் மலர் காவடி விழா கோலாகலம்

*திரளானோர் பங்கேற்பு

கழுகுமலை : கழுகுமலையில் நடந்த மலர் காவடி விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்ற பக்தர்கள் மலர் காவடி எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கழுகுமலையில் பிரசித்திபெற்ற குடைவரை கோயிலான கழுகாசலமூர்த்தி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மலர் காவடி விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மலர் காவடி விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

காலை 9 மணிக்கு கோவை கொளமார மடாலயம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், தருமையாதீனம் தம்பிரான் சுவாமிகள், கல்லிடைகுறிச்சி ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞானமகாதேவ தேசிக பராமாச்சாரிய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பராமாச்சாரிய சுவாமிகள், பேரூர் ஆதீனம் 25-வது குருமகா சந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், பழனி சாது சுவாமிகள் திருமடம் சீர்வளர்சீர் சாது சண்முக அடிகளார், திருநெல்வேலி உமையொருபாக ஆதீன மடம் சிவஸ்ரீ உமா மகேஸ்வர சிவாச்சாரியார் சுவாமிகள், சிவகிரி ஆதீனம் 75-வது குரு பீடாதிபதி உத்தண்ட ராஜகுரு ஸ்ரீலஸ்ரீ சிவ சமய பண்டித குரு சுவாமிகள், தென்சேரி மலை தவத்திரு முத்து சிவராமசாமி அடிகளார், பழனி ஸ்ரீமத் போகர் ஆதீனம் புலிப்பாணி சித்தர், குடியாத்தம் வன்னிமலை சிவானந்த வாரியார் குமார மடம் ஆதீனம் குருமகராஜ் அருளுரை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் இருந்து மலர் காவடி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். இதில், குழந்தைகள் முதல் பெரியோர் வரை 1008 பேர் மலர் காவடிகள் எடுத்து மலையை கிரிவலமாக சுற்றி வந்து கோயிலை சேர்ந்தனர். அப்போது கரகாட்டம், பொய்கால் குதிரை உள்ளிட்ட கலைஞர்களும் மேளம் தாளம் முழங்க பக்தர்களுடன் கிரிவலம் வந்தனர்.

நண்பகல் 12.30 மணிக்கு கழுகாசலமூர்த்தி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அர்ச்சனையும், தொடர்ந்து மலர் காவடியில் கொண்டு வரப்பட்ட பூக்களால் புஷ்பாஞ்சலி பூஜையும், தீபாராதனையும் நடந்தது. இதில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், கழுகுமலை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மகேஷ்வர பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் சீர் பாத தாங்கிகள் பக்தர்கள் எல்லாம் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முருகபக்தர்கள் பேரவை செய்திருந்தனர்.

Tags : Flower Khawadi Ceremony ,Kagugamalai Kalukasalamoorthi Temple ,Kolakalam ,Kagugamalai ,Flower Khawadi Festival ,Gakumala ,Krivalam ,Marghazi ,Kaghukasalamoorthi Temple ,Kudaiwara temple ,Kaghukumala ,
× RELATED முத்திரை திட்டங்களின் (Iconic Projects)...