×

காவல்துறை உயர்அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் கூடாது தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியது பாராட்டுக்குரியது: ஐகோர்ட் கருத்து

சென்னை: கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென்று கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆர்டர்லிகளாக தற்போது யாரும் இல்லை என்று தமிழக டிஜிபி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஆர்டர்லிகளாக யாரையும் பணியில் வைத்திருக்கக்கூடாது என்று டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியதற்கு பாராட்டுகள். அதேவேளையில் ஆர்டர்லிகளாக சீருடை காவலர்கள் பணியாற்றி வருவதாக செய்தி தாள்களிலும், பொதுத் தளத்திலும் தகவல்கள் வரும் நிலையில் ஆர்டர்லிகளாக யாரும் இல்லை என்று டிஜிபி கூறுவதை ஏற்க முடியவில்லை என்றனர். இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஆர்டர்லிகளாக பணியில் இருப்பது தொடர்பாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை தாமாக முன்வந்து இணைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்திற்கு உதவ வேண்டுமென்ற தெரிவித்து விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Tamil Nadu ,DGP ,Chennai ,Radhakrishnan ,Salem ,Tamil Nadu… ,
× RELATED தமிழ்நாட்டில் கஞ்சா சப்ளை செய்த பெண் தாதா ஆந்திராவில் கைது