×

பனப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் மண்டி வீணாகும் சிறுவர் பூங்கா

ஊத்துக்கோட்டை, டிச.19: பெரிபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியம் பனப்பாக்கம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சுற்றியுள்ள இளைஞர்கள் பயன்பாட்டிற்காக, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிதுறை சார்பில் கடந்த 2016-2017ம் ஆண்டு தாய் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் சிறுவர்கள் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இந்த உடற்பயிற்சி கூடமும், பூங்காவும் 3 ஆண்டுகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக இவை இரண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பூங்கா முழுவதும் புதர் மண்டி காணப்படுவதால், அதில் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், சிறுவர்கள் அச்சப்பட்டு விளையாட வருவது இல்லை. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மழைநீர் பூங்காவில் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. எனவே, புதர்கள் மண்டியும், சேறும் சகதியுமாக கிடக்கும் பூங்காவை சீரமைக்க வேண்டும். மேலும், உடற்பயிற்சி கூடத்தில் துருப்பிடித்திருக்கும் சாதனங்களை மாற்றி புதிதாக வாங்கி, பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையத்தை பராமரிக்க ஊராட்சி சார்பில் ஒருவரை நியமிக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Panappakkam ,Uthukkottai ,Yellapuram ,Peripalayam ,Rural Development ,Local Government Department ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்