- தேசிய ஹெரால்டு
- மோடி
- Amitsha
- காங்கிரஸ்
- புது தில்லி
- தில்லி நீதிமன்றம்
- அமலாக்கத் துறை
- சோனியா
- ராகுல் காந்தி
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தில் பல கோடி சொத்துக்கள் குறைந்த விலைக்கு முறைகேடாக பெறப்பட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றம் நேற்று முன்தினம் ஏற்க மறுத்தது. இதன் மூலம் அரசியல் காரணங்களாக இந்த வழக்கை அமலாக்கத்துறை முறைகேடாக விசாரிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், டெல்லி நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் மூத்தர் தலைவர்கள் கே.சி. வேணுகோபால், அபிஷேக் சிங்வி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கேரா ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு மோடியும் ஷாவும் பதவி விலக வேண்டும். ஏனெனில் நீதிமன்றத்தின் இந்த முடிவு அவர்கள் முகத்தில் விழுந்த அறை போன்றது. அவர்கள் இதுபோன்று மக்களைத் துன்புறுத்தக் கூடாது என்பதால் பதவி விலக வேண்டும். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்தால் மக்கள் அதைச் சகித்துக்கொள்ள மாட்டார்கள். அமைதியாக இருக்க மாட்டார்கள். மக்களிடமிருந்து அவமானத்தை எதிர்கொள்வார்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் நாங்கள் தொடர்ந்து போராடி அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம். இந்த பழிவாங்கும் அரசியலை நாட்டின் தெருக்களில் நாங்கள் அம்பலப்படுத்துவோம். இப்போது முழு தேசமும் கொதிப்படைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக, காங்கிரஸ் கட்சி அமலாக்கத்துறையால் தொடர்ச்சியான துன்புறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைப்பதற்காக அமலாக்கத்துறை எவ்வாறு திட்டமிட்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்துகிறது
பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஒரு தனி நபர் அளித்த புகார் என்பதால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததால் அமலாக்கத்துறையின் குற்றபத்திரிகையை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதே சமயம் அமலாக்கத்துறை தனது விசாரணையை தொடரலாம் என நீதிமன்றம் கூறி உள்ளது. நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்யவில்லை. இன்னமும் சோனியா காந்தி முதல் குற்றவாளியாகவும், ராகுல் காந்தி 2வது குற்றவாளியாகவும் உள்ளனர். ஆனால் இந்த விஷயத்தில் வழக்கே முடிந்து விட்டதாக மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழிநடத்துகிறது. குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும்’’ என்றார்.
நாடாளுமன்றத்தில் போராட்டம்
நேஷனல் ஹெரால்டு வழக்கு தீர்ப்பை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத்துறையை ஒன்றிய பாஜ அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘வாய்மையே வெல்லும், உண்மையே ஜெயிக்கும்’ என எழுதப்பட்ட பேனரை ஏந்தி ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இப்போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், சசிதரூர், தாரிக் அன்வர், குமாரி செல்ஜா, கே.சுரேஷ், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
