×

100 நாள் வேலை உறுதி திட்டத்தின் புதிய மசோதா பெயர் எரிச்சலூட்டுகிறது: தமிழில் பெயர் வைக்காதது ஏன்? என கனிமொழி அதிரடி கேள்வி

புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாற்றாக வளர்ந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டத்தை (விபி-ஜி ராம் ஜி) ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பான மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களவையில் மசோதா மீதான விவாதத்தை ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், ‘‘இந்த மசோதா கிராமப்புறங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்து, ஏழ்மையை நீக்கும். கிராம மக்களின் வளர்ச்சிப் பாதையை விரிவுபடுத்தும்’’ என்றார். விவாதத்தை தொடங்கிய காங்கிரஸ் எம்பி ஜெய் பிரகாஷ், ‘‘இந்த மசோதாவில் காந்தியின் பெயர் நீக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய குற்றம். இந்த மசோதா மாநிலங்கள் மீது நிதிச்சுமையை ஏற்றுகிறது. கிராம சபைகளின் உரிமையை பறிக்கிறது. தலித்துகளுக்கு விரோதமான, ஏழைகளுக்கு விரோதமான இந்த மசோதாவை பணக்காரர்களுக்கு ஆதரவான ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்திருக்கிறது’’ என்றார்.

பின்னர் திமுக எம்பி கனிமொழி பேசுகையில், ‘‘இந்த மசோதாவின் பெயரை படிப்பதே எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. இது இந்தி பேசாத மாநிலங்கள் மீது மீண்டும் மீண்டும் இந்தியை திணிப்பதை தவிர வேறில்லை. மாநிலங்கள் மீது இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க ஒன்றிய அரசு புதுப்புது வழிகளை கண்டறிகிறது. இது விக்சித் பாரத் மசோதா அல்ல, விரக்தி பாரத மசோதா. சமீபகாலமாக அனைத்து மசோதாக்களுக்கும் இந்தியில் சமஸ்கிருதத்தில் மட்டும் பெயர் வைப்பது ஏன்? மசோதாக்களுக்கு ஏன் தமிழில் பெயர் வைக்கப்படுவதில்லை? தேர்தல் வந்தால் மட்டும் ஒன்றிய அரசுக்கு தமிழ் மீது பாசம் வருகிறது. தமிழனாக பிறக்கவில்லையே என வருத்தப்படுகிறார்கள். மற்ற சமயங்களில் ஏன் பாசம் வருவதில்லை?’’ என சரமாரி கேள்வி எழுப்பினார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசுகையில், ‘‘காந்தி பெயரை நீக்கி விட்டு, ராமர் பெயரை உள்ளே கொண்டு வந்து மதமயமாக்குகிறார்கள். இந்த மசோதா எந்த ஒரு தனிநபரின் வளர்ச்சிக்காகவும் இல்லை. ராமருக்காகவும் இல்லை, ரஹீமுக்காகவும் இல்லை’’ என்றார். தெலுங்கு தேசம் கட்சி எம்பி லவு கிருஷ்ணா தேவராயலு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

Tags : New Delhi ,Union Government ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...