×

சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க நடைமுறைகளை வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதை தடுக்க உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை சாலைகளில் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் தாய்மார்கள், உண்மையிலேயே அந்த குழந்தைகளின் தாய் தானா என்பதை கண்டறிவதற்காக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சாலை சிக்னல்களில் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கு எந்த உருவ ஒற்றுமையும் இல்லை. பிச்சை எடுக்க பயன்படுத்தும் குழந்தைகள் எந்நேரமும் தூங்கிக் கொண்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வெயில், வாகன சத்தத்துக்கு கூட அந்த குழந்தைகள் கண்முழிப்பது இல்லை. அதனால் குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டிருக்கிறதா?, வேறு மருந்துகள் அல்லது ஆல்கஹால் கொடுக்கப்பட்டிருக்கிறதா என கண்டறிய வேண்டும். பிச்சை எடுக்கும் பெண்கள் பெரும்பாலும் தமிழில் பேசுவதில்லை. குழந்தைகளை வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்து பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகிறதா? பின்னணியில் செயல்படுவோர் யார் என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதுசம்பந்தமாக அளித்த மனுவை பரிசீலித்து, குழந்தைகளை மீட்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடைமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும். தமிழக அரசு இந்த மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 11 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : High Court ,Tamil Nadu government ,Chennai ,Madras High Court ,
× RELATED மகளிர் உரிமைத் தொகை டிச.12ம் தேதி...