×

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு முககவசம் அணிந்து சோனியா காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்: நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு

புதுடெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சி எம்பி.க்கள் தினசரி ஒவ்வொரு புகார்களை கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நேற்று நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் நான்காம் நாள் அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், நவீன முகக்கவசம் அணிந்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி அரசாங்கத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். எங்கள் எதிர்காலத்தை நெரிக்காதீர்கள்’, ‘சுத்தமான காற்று ஒரு உரிமை, ஆடம்பரம் அல்ல’ போன்ற எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

சோனியா காந்தி கூறுகையில், காற்று மாசுவினால் குழந்தைகள் இறக்கிறார்கள், என்னை போன்ற வயதானவர்கள் கடுமையாக சிரமப்படுகின்றனர் என்றார். பிரியங்கா காந்தி,தலைநகரில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரிக்கை விடுத்தோம். இது அரசியல் பிரச்னை அல்ல. எனவே அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னையில் அரசுக்கு நாங்கள் துணை நிற்போம் என்றார்.

Tags : Sonia Gandhi ,Delhi ,New Delhi ,Parliament ,
× RELATED பலாத்கார வழக்கு: நீதிமன்றத்தின் மீதான...