×

மாற்றுத்திறனாளி வீரர்கள் 25 பேருக்கு இந்த ஆண்டில் வேலைவாய்ப்பு: துணை முதல்வர் உதயநிதி உறுதி

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்த ‘உலக மாற்றுத்திறனாளிகள் தினம் – 2025’ மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இன்றைக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு நிறையபேர் மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக பேசலாம். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பே முழுக்க, முழுக்க மாற்றுத் திறனாளிகளினுடைய நலனை சிந்தித்து செயல்பட்டவர் கலைஞர். இன்றைக்கு தமிழ்நாடு மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறார்கள். தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து நிதி உதவியும், ஊக்கத் தொகையும் முதல்வர் வழங்கி வருகிறார்.

அதன் விளைவாக மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள் இன்றைக்கு சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை குவித்து சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்து கொண்டிருக்கிறீர்கள். அப்படி சாதனை படைத்த 5 மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கு முதன்முறையாக நம்முடைய மாநிலத்தில் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டீன் கீழ் அரசு பணியை திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். இந்த முறை முதல்வர் எங்களுக்கு ஒரு இலக்கு கொடுத்திருக்கிறார். சென்ற வருடம் 5 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தோம். இந்த ஆண்டு 25 மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இப்படி எல்லா வகையிலும் மாற்றுத்திறனாளிகளுடைய நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் முதல்வருக்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi ,Chennai ,World Disabled Persons Day - 2025 ,Disabled Persons Welfare Department ,Udhayanidhi Stalin ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்