×

ஓய்வூதிய திட்டங்கள் இடைக்கால அறிக்கை தொடர்பாக 3 அமைச்சர்கள் கொண்ட குழு ஆலோசனை: விரைவில் முக்கிய முடிவுகள் அறிவிக்க திட்டம்

சென்னை: அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு நேற்று முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர். மேலும் ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கொள்கைகள் மற்றும் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை அரசு ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, அரசு ஊழியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, மருத்துவ வசதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக காத்திருப்பு போராட்டங்களையும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் பலமுறை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய முறைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளவும், மாநில அரசின் நிதிநிலையும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைக்கு ஏற்ற திட்டத்தை பரிந்துரைக்கவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, அரசு பணியாளர் சங்கங்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்திய அந்த குழு, எல்ஐசி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடனும் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அந்த குழு சமர்ப்பித்தது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இடைக்கால அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் எது அரசு மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பது குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு டிசம்பர் மாத இறுதிக்குள் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Tamil Nadu Group of Ministers ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...