- சிந்தூர்
- இந்திய எல்லை
- காஷ்மீர்
- ஐஜி
- ஸ்ரீநகர்
- எல்லை பாதுகாப்பு படை
- பாக்கிஸ்தான்
- ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்
- பஹல்கம், காஷ்மீர்
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் அத்துமீறினால் ஆபரேஷன் சிந்தூர் இரண்டாம் கட்டத் தாக்குதலை நடத்தத் தயாராக இருப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மே மாதம் இந்திய ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முதல் கட்டத் தாக்குதலை நடத்தின. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டன.
இந்தியாவின் இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான், தனது துப்பாக்கிச் சூட்டு எல்லைக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை அங்கிருந்து அகற்றி, சற்றுத் தொலைவில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிக்கொண்டது. இந்நிலையில், எல்லையில் மீண்டும் பயங்கரவாதிகள் குவிக்கப்பட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் காஷ்மீர் மண்டல ஐஜி அசோக் யாதவ் கூறும்போது, ‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள 69 ஏவுதளங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன; அங்கு சுமார் 100 முதல் 120 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவத் தயாராகக் காத்திருக்கின்றனர்.
பாகிஸ்தான் மீண்டும் ஏதேனும் விபரீத முயற்சியில் ஈடுபட்டால், ஆபரேஷன் சிந்தூர் 2.0 மூலம் முன்பை விட மிகக் கடுமையான பதிலடி கொடுக்க நாங்கள் முழுத் தயார் நிலையில் உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார். பனிப்பொழிவு தொடங்கும் முன் ஊடுருவலைத் தடுக்க நவீன கண்காணிப்பு சாதனங்களுடன், பெண் வீராங்கனைகள் அடங்கிய படைகளும் எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
