×

மெஸ்ஸி வருகையால் வெடித்த கலவரம்; கொல்கத்தா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விமான நிலையத்தில் கைது: 14 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவு

 

கொல்கத்தா: மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முக்கிய ஏற்பாட்டா ளரை 14 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை ‘லியோனல் மெஸ்ஸி கோட் இந்தியா டூர் 2025’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கியிருந்தனர். ஆனால், மைதானத்தில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படாததாலும், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் மெஸ்ஸியைச் சூழ்ந்து கொண்டதாலும் ரசிகர்களால் அவரைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.

வெறும் 22 நிமிடங்கள் மட்டுமே மெஸ்ஸி இருந்துவிட்டுச் சென்றதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், மைதானத்தில் இருந்த நாற்காலிகளை உடைத்தும், தண்ணீர் பாட்டில்களை வீசியும் கடும் ரகளையில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மெஸ்ஸியுடன் ஐதராபாத் தப்பிச் செல்ல முயன்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவை விமான நிலையத்தில் வைத்துப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

அவர் மீது மோசமான நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று பிதான்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜாமீன் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, ‘சதத்ரு தத்தாவை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். இதற்கிடையே, மைதானத்திற்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் எவ்வாறு விற்கப்பட்டன என்பது குறித்தும், சிசிடிவி காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

Tags : Messi ,Kolkata show ,Kolkata ,Salt Lake Stadium ,Lionel Messi ,India ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்