×

திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம் 2,668 அடி மலை உச்சிக்கு சென்றது தீபக்கொப்பரை: பக்தர்கள் மலையேற தடை; 15,000 போலீஸ் பாதுகாப்பு; 5500 சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகாதீப பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. அதையொட்டி, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக ஐந்தரை உயர தீபக்கொப்பரை நேற்று தோள்சுமையாக மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து விமரிசையாக நடந்து வருகிறது. தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாளான இன்று, ‘மகாதீப பெருவிழா’ கோலாகலமாக நடைபெறுகிறது.

இதுவரை எந்தஆண்டும் இல்லாத அளவில், மகாதீபத்தை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு வருகின்றனர். 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகாதீபத்தை தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அண்ணாமலையார் திருக்கோயில் கருவறை முன்பு இன்று அதிகாலை 4 மணிக்கு, ‘ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படும். கோயிலுக்குள் பக்தர்களை அதிகாலை 2 மணி முதல் அனுமதிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெறும். மாலை 5.58 மணிக்கு, கோயில் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளிப்பார். அப்போது, கொடிமரம் முன்பு அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மிகச்சரியாக மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான ‘மகா தீபம்’ ஏற்றப்படும்.

மகா தீபம் ஏற்றுவதற்கான தீபகொப்பரைக்கு கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பணி ஊழியர்கள் தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டுசென்று சேர்த்தனர். மலைமீது சிறப்பு பூஜைகளுடன் தீப கொப்பரை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட மகாதீப கொப்பரை ஐந்தரை அடி உயரமும், 200 கிலோ எடையும் கொண்டதாகும். தீபம் ஏற்றுவற்காக 4,500 கிலோ தூய நெய், 1,500 மீட்டர் திரி (காடா துணி), 25 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.

இவை இன்று அதிகாலை மலைக்கு கொண்டு செல்லப்படும். மகாதீபம் ஏற்றப்படும் மலை மீது செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபம் ஏற்றும் திருப்பணியில் ஈடுபடுவோர் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மட்டும் மலைமீது அனுமதிக்கப்பட உள்ளனர். மகாதீப விழாவை தரிசிக்க, இன்று மதியம் 2 மணியில் இருந்து கோயிலுக்குள் கட்டளைதாரர், உபயதாரர் அனுமதிச் சீட்டு மற்றும் ஆன்லைன் கட்டண தரிசன டிக்கெட் பெற்றிருப்போரை மட்டும் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக, 5484 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள கால அட்டவணைப்படி 16 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருவண்ணாமலை நகரை இணைக்கும் பிரதான சாலைகளில் 24 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கார், வேன் போன்றவை நிறுத்த 130 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) டேவிட்சன்ஆசிர்வாதம் தலைமையில், 2 ஐஜிக்கள், 6 டிஐஜிக்கள், 32 எஸ்பிக்கள் உள்பட 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு, சிறப்பு கமாண்டோ படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

* பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நாளை (4ம் தேதி) காலை 7.58 தொடங்கி, நாளை மறுதினம் (5ம் தேதி) அதிகாலை 5.37 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நாளை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, அண்ணாமலை மீது மகா தீப திருவிழாவுக்கு மறுதினம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்திருப்பதால், நாளையும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்கம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து வரும் 5ம் தேதி பகல் 2 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளன. மேலும், இன்று மாலை மலை மீது ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஏஐ கேமரா மூலம் சிறப்பு கண்காணிப்பு
கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய வசதியாக செல்போன் எண்ணுடன் கூடிய ‘ரிஸ்ட் பேண்ட்’ குழந்தைகளின் கைகளில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் திருட்டு செயின் பறிப்பு போன்றவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியின் நடமாட்டத்தை கண்காணிக்க ‘பேஸ் டிராக்கிங்’ எனும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் பொருத்தப்பட்டு கூட்ட நெரிசல் கண்காணிக்கப்படுகிறது.

Tags : Mahadeepam ,Tiruvannamalai ,Mahadeepa ,Deepakkoparai ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் எஸ்ஐ...