×

சென்னையில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உணவு, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உணவு, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்றைய தினம் விடாமல் பெய்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றும் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில்,

215 இடங்களில் நிவாரண மையங்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் 215 நிவாரண மையங்கள் மற்றும் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 111 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

2.23 லட்சம் பேருக்கு காலை உணவு விநியோகம்

சென்னையில் இன்று காலையில் 2.23 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

2.78 லட்சம் பேருக்கு உணவு விநியோகம்

நவம்பர்.30, டிசம்பர்.1 ஆகிய 2 நாட்களில் சென்னையில் 2.78 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

மக்களை மீட்க 107 படகுகள் தயார் நிலையில் உள்ளன

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்க 107 படகுகள் தயார் நிலையில் உள்ளன. மீட்பு பணிக்கு சென்னையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 300 பேர், எஸ்டிஆர்எப் குழுவினர் 50 பேர் தயாராக உள்ளனர்.

21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை

சென்னையில் 22 சுரங்கப்பாதைகளில் 21 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்காமல் போக்குவரத்து சீராக உள்ளது. கணேசபுரம் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் 22,000 பேர் களத்தில் உள்ளனர்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் 2149 களப்பணியாளர்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை மேற்கொள்ள ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 1,18,182 பேர்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 17.10.2025 முதல் 2863 நிலையான மற்றும் நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1.12.2025 வரை 1,18,182 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

Tags : Chennai ,Chennai Corporation ,Tamil Nadu ,Tiruvallur… ,
× RELATED தமிழக அரசின் மீது சுமை கூடுவதை...