×

செங்கோட்டையன் விவகாரம் பாஜவின் சித்து விளையாட்டு: திருமாவளவன் சந்தேகம்

கோவை: கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: செங்கோட்டையன் அதிமுகவின் ஒரு மூத்த தலைவர். அவர் அதிமுகவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு இருப்பது அந்த கட்சிக்கு உகந்தது அல்ல. அவர் தவெகவை தேர்வு செய்தது அவருடைய முடிவு. அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.

ஆனால், அதிமுகவை இப்படி ஒரு நெருக்கடிக்கு தள்ளியதில் பாஜவிற்கு ஒரு பங்கு இருப்பதாக நான் கருதுகிறேன். ஏற்கனவே, செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று வந்த பிறகு என்னை அழைத்தது அமித்ஷாதான் என்று கூறியிருக்கிறார். அமித்ஷா மற்றும் பாஜ தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த ஒருவர் அதிமுகவில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றால், அதிமுகவும் பாஜவும் கூட்டணி கட்சிகளாக இருக்கக்கூடிய சூழலில் இது எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்ற கேள்வி எழுகிறது.

அதிமுகவில் இப்படிப்பட்ட ஒரு பலவீனம் ஏற்படுவதை பாஜ ஏன் வேடிக்கை பார்க்கிறது? எனவே, செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து வெளியேறியதில் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை தான் காரணமா? அல்லது பாஜவின் சித்து விளையாட்டுகளில் இதுவும் ஒன்றா? என்ற சந்தேகம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்
‘நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப உள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அவையை ஒத்திவைத்து எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.

சிஏஏ சட்டத்தை நேரடியாக நடைமுறைப்படுத்தாமல், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி செய்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு போக்கு. இதன் மூலம் பத்து சதவீதத்தில் இருந்து 15 சதவிகித வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும். இதனால் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படக்கூடிய அபாயம் உள்ளது’ என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Tags : Sengkottiyan ,Liberation Leopards Party ,Thirumavalavan ,Senkottaian ,Atamugawa ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்