சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி நேற்று அளித்த பேட்டி: எஸ்.ஐ.ஆர். என்பது அடித்தட்டு மக்கள், பி.எல்.ஓ.க்கள் மீது அக்கறை, மனிதாபிமானம் இல்லாமல் திணிக்கும் திட்டமாக இருக்கிறது. பல மாநிலங்களில் பி.எல்.ஓ.க்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் மிக குறைவான காலத்தில் இந்த பணிகளை முடிக்க சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் போராட்டத்துடன் தான் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுவும் இது மழைக்காலம். இது மழைக்காலம் என்பதை கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பணி செய்ய வலியுறுத்துகிறார்கள். மழை காலத்தில் மக்களை பாதுகாக்கும் பணி அதிகாரிகளுக்கு உள்ளது. அந்த பணிகளை விட்டு அதிகாரிகள் எஸ்.ஐ.ஆர். பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது மக்களைப் பற்றி அக்கறையே இல்லாமல், போதிய அவகாசம் தாராமல், குறுகிய காலத்தில் செய்து முடிக்க சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கண்டிப்பாக இதையெல்லாம் நாங்கள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
