- அமைச்சர்
- சென்னை
- மு.R.K பன்னீர் செல்வம்
- 87வது வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் மாநாடு
- அண்ணா நிர்வாக பணியாளர்கள் கல்லூரி
சென்னை: விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு பொருத்தமான அறிவியல் தீர்வை வேளாண் விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும் என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார். சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடந்த 87வது வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் கருத்தரங்கை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
காலநிலை மாற்றங்களால் வேளாண் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படா வண்ணம் உகந்த மண்வள பாதுகாப்பு, பயிர் முறை, விதைப்பு, நீர்ப்பாசனம் மற்றும் உரங்களை திட்டமிடுதல், களையெடுத்தல், பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள், அறுவடை, காப்பீடு போன்றவற்றை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விரிவாக்க அலுவலர்களுடன் கலந்தாலோசித்து உகந்த திட்டங்கள், உத்திகளை சரியான நேரத்தில் உருவாக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சிக்கு வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். விரிவாக்க அமைப்பின் பல்வேறு தேவைகளை ஆராய்ந்து, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு பொருத்தமான அறிவியல் தீர்வை வேளாண் விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளில் வேளாண்மையில் ஏற்படுத்தப்பட்ட அரசின் சாதனைகளை விவசாயிகளுக்கு தெரிவித்திடவும், கடந்த 10 ஆண்டுகளில் 2012-13 முதல் 2020-21 வரை சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கரும்பில் பொக்கபோயிங் மற்றும் மஞ்சள் இலை நோய், உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய், மக்கச்சோளம் மற்றும் பருத்தியில் படைப்புழு தாக்குதல், தென்னையில் வேர்வாடல் நோய், வெள்ளை ஈக்கள் போன்று பல்வேறு பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய்த்தாக்குதல்களுக்கு உடனடி தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், வேளாண்உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் ஆபிரகாம், வேளாண்மை இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலைத்துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் தமிழ்வேந்தன் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.
