போடி: போடி பகுதியில் விபத்துக்கள், குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம், போடி நகரானது கொச்சி-தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் முக்கிய சந்திப்பாக உள்ளது. கேரளாவில் உள்ள மூணாறு, குரங்கணி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதற்கும் இங்கிருந்தே செல்ல வேண்டும். மேலும் இங்கிருந்து உத்தமபாளையம், சின்னமனூர் செல்வதற்கு நெடுஞ்சாலைகள் உள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் தோட்ட வேலைக்காக கேரளாவுக்கு சென்று வருகின்றனர். தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் போடி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
அதிவேகமாக டூவீலர்கள், வாகனங்களை ஓட்டிச் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. போடி மெட்டு மலைச் சாலையிலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
அவ்வப்போது குற்றச் செயல்களும் நடந்து வருகின்றன. மேலும், தற்போது ஐயப்ப சீசன் துவங்கியுள்ளது. இதனால் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு போலீசார் இந்நிலையில், நகர் மற்றும் புறநகர் பகுதியில் போலீசார் தீவிர வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். போடி தாலுகா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் போடி-உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் மாநில நெடுஞ்சாலைகளில் ரெங்கநாதபுரம், மேலச்சொக்கநாதபுரம் பிரிவு, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, சங்கராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். அதிவேகமாகச் செல்லும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்து அனுப்புகின்றனர்.
